பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

175


சைவ சமய நெறியாளர்கள் சிந்தனைப் போக்குக்கு எல்லை கட்டிக் கொண்டு-கோட்டை கட்டிக்கொண்டு பின் தோன்றிய சிந்தனைகளைப் புறக்கணித்து விட்டனர்; புறக் கணித்து வருகின்றனர். சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணத்தோடு திருமுறையுகம் முற்றுப் பெறுகிறது. உமாபதி சிவம் இயற்றிய சாத்திர நூல்களுடன் சித்தாந்த சாத்திர யுகம் முடிகிறது. இவைகளை விளக்குவனவாகப் பின்னே சில தோன்றியிருக்கின்றன. ஆனால் அவைகள் முன்னர்க் கூறியவற்றை, விளக்கும் பணியில் ஈடுபட்டனவே தவிர ஆய்வில் ஈடுபடவில்லை. இச்சமயநெறி தோன்றிய பின் உலக அரங்கில் தோன்றியுள்ள கிறித்துவம், இசுலாமியம் போன்ற சமயநெறிகளைச் சீர்தூக்கி ஆராய்ந்து அவற்றில் ஏற்பனவற்றை ஏற்கவோ, அவைகளுக்கு வழங்க வேண்டியவற்றை வழங்கவோ சித்தாந்தச் செந்நெறி இயக்கங்கள் முயற்சியெடுத்துக் கொள்ளவில்லை. ஏன்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் மாமுனிவன் கார்ல்மார்க்ஸ் மனித உலகத்திற்குச் சீரான வாழ்க்கையை வழங்க வேண்டுமென்ற விழுமிய நோக்கத்துடன் பொதுவுடைமைத் தத்துவத்தை, ஒரு புதிய வாழ்க்கை முறையை உலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளான். நம் சைவ சித்தாந்தச் சொற்பொழிவில், கடவுள் நம்பிக்கையில்லாத-"மதம் மக்கட்கு அபின்” என்று கூறிய கார்ல்மார்க்சை “மாமுனிவன்” என்று குறிப்பிடுகிறோமே என்ற வினா எழலாம். கார்ல்மாக்சை மாமுனிவர் என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார். இன்று உலகியலில் மெய்ப் பொருளியலை ஆராய்ந்தறிந்து முடிவுக்கு வரவேண்டுமென்றால் மார்க்சீயத்தை ஆராயாமல் எடுக்கப்பெறும் மெய்ப்பொருள் பற்றிய முடிவுகள் குறையுடையனவேயாம். இந்த ஆய்வைச் சமயநெறியாளர்கள் நிகழ்த்த விரும்பாமல் மார்க்சீயத்தை நாத்திகம் என்று ஓதுக்குகின்றனர்; பயமுறுத்துகின்றனர்! அது பெரும்பிழை. மார்க்சீயத்தைச் சந்தித்துத் திறனாய்வு செய்து மார்க்சீயம் விரும்புகின்ற வேறுபாடற்ற