பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெண்ணின் நல்லா ளொடும் பெருந்தகை இருந்ததே!
(அடங்கன்முறை 3052)

என்றும் உணர்த்துவது அறிக. ஆனால், அம்மையும் அப்பனும் ஒருங்கிணைந்து உலகியல் தன்மை நோக்கி நிற்றலால் இருவராகக் கூறாமல், ஒருவராகவே போற்றும் தமிழ் மரபு தோன்றியது. இதனைக் குமரகுருபரர்,

ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருஒன் றால்அவ்
உருவையிஃது ஒருத்தன் என்கோ? ஒருத்தி என்கோ?
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றுஓர்
இயற்சொல்இல தெனின்யான்மற் றென்சொல் கேனே
(சிதம்பரச் செய்யுட்கோவை-54)

என்கிறார்.

சித்தாந்தச் செந்நெறியில் இரண்டாவதாக வைத்தெண்ணப்படும் பொருள் உயிர் உயிரைப் பற்றிச் சித்தாந்தச் செந்நெறி கொண்டிருக்கும் கொள்கை, உலகியல் அமைப்பில் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்குத் துணையாக அமைகிறது. சித்தாந்தத்தின் அடிப்படையில் உயிர், என்றும் உள்பொருள். உயிர் யாராலும் படைக்கப்பட்டதன்று. உயிர்க்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை என்பன சைவ சித்தாந்தம் கொண்டுள்ள முடிவுகள். சித்தாந்தம் உயிரைப் பற்றிக் கொண்டுள்ள இம்முடிவினால் உயிர்களிடை நிலவும் குறை நிறைகளுக்கும், இன்ப துன்பங்களுக்கும், உயர்வு தாழ்வுகளுக்கும் கடவுள் பொறுப்பல்ல என்ற தெளிவு பிறக்கிறது. இத்தெளிவு மார்க்சியத்திற்கும் சித்தாந்தத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது. மார்க்சியம் அல்லது மார்க்சியத்திற்கு முதல் நிலையிலிருந்த உலகாயதம், உயிரை உள்பொருளாக ஒத்துக்கொள்வதில்லை. “வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றையும் கலந்தால் ஒரு சிவப்பு தோன்றுவதைப் போல ஐம்பூதங்களின் கூட்டால் உடல் உற்பத்தியாகும் போது ஒரு சக்தி தோன்றுகிறது;