பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

183


உடலை இயக்கி உடல் அழியும் போது அச்சக்தியும் அழிந்து விடுகிறது” என்பது கருத்து.

இந்த உண்மையைக் கொஞ்சம் சிந்தித்தாலேகூடத் தவறு என உணர முடியும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றும் சடப்பொருள்கள். இவை எப்படிச் சேரும்? சேர்ப்பார் வேண்டாமா? அடுத்து வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு சேர்ந்தால் ஒரே மாதிரியான சிவப்பு தோன்றுவதில்லை. தரத்தில், அளவில் கூடுதல் குறைவான சிவப்பு தோன்றுதல் உண்டு. இந்தச் சேர்க்கை அளவாக இருக்கும் பொழுது இன்பமும், அளவு மிகும் பொழுது வாய் வெந்து புண்ணாவதும் உண்டு. ஆதலால், இந்த உவமை உயிரின்மையை மறுப்பதற்குப் பொருந்தாது! அடுத்து உயிரை மறுப்பவர்கள் புத்தர்கள். அவர்களுக்கு எல்லாமே சூன்ய மயம். சூன்யத்திலிருந்து எப்படி ஒன்று தோன்ற முடியும்; இயங்க முடியும். அடுத்து உயிரைப் பற்றிய கொள்கையில் இரண்டாம் கட்டத்தில் நிற்பார்கள் வேதாந்திகள். வேதாந்திகளிலும் ஏகான்மவாதிகள் குறிப்பிடத்தக்கவர்கள். உலகியல் வழக்கில் இவர்கள் “சுமார்த்தர்” என்று அழைக்கப்படுவர். இன்றைய ஜகத் இவ்வகையைச் சேர்ந்ததே! இவர்கள் ஆன்மாவை மறுப்பதில்லை. ஆன்மா ஒன்றே என்பர். சித்தாந்திகளின் கொள்கை ஆன்மா ஒன்றல்ல; பலப்பல; எண்ணில என்பது.

வேதாந்திகள், “ஒரோயொரு ஆன்மா உண்டு. அது பரமான்மா. அந்தப் பரமான்மாவே பல சீவான்மாக்களாக விரிவடைகிறது” என்பர். இவையெல்லாவற்றையும் மறுத்துச் சித்தாந்தச் செந்நெறி உயிரைப் பற்றிக் கொண்டுள்ள முடிவு அறிவுக் கிசைந்ததாக உள்ளது. சித்தாந்தச் செந்நெறிப்படி ஆன்மா என்றும் உள்ள பொருள். ஆன்மா ஒன்றல்ல. பலப் பல; ஆன்மாக்களின் தோற்றம் ஒன்றிலிருந்து ஒன்றல்ல. ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவில் தோற்றமளிக்காது.