பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

199


தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்

என்ற பாரதியின் வாக்கு, சமயநெறிக்கும் பொருந்தும்,

மானிட வாழ்க்கையை அணுகுவதில் உலகச் சமயங்களிடையில் மாறுபாடுகள் உண்டு. “உயிரினத்தைக் கடவுளே படைத்தான்” என்று கூறும் சமயங்கள் உள. உயிரினத்தைக் கடவுளே படைத்தான் என்ற இக்கொள்கை ஆபத்தானது; அறிவியல் அறிவுக்கு, ஈடுகொடுக்க இயலாதது. கடவுள், நிறைநலம் உடையவன், பரிபூரணன்.

இறைவனால் படைக்கப்பெற்ற உயிரினங்களில் குறை ஏன்? என்ற வினாவிற்கு விடை காண்பது கடினம். அடுத்து, உயிரினத்தைக் கடவுளே படைத்தான் என்றால் குறை நிறைகளுக்கு அவனே பொறுப்பு என்றாகும். இதனால் பொறுப்புணர்வற்ற, சமுதாயம் தோன்றும்; கொலைகளும், தீமைகளும்-குறும்புகளும் வளரும்.

சில சமயநெறிகள் வாழ்க்கையைத் துன்பச் சுமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நெறிகள் வாழ்க்கையில் துய்த்து மகிழ்தல் கூடாது; கடுத்துறவு நெறி நிற்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இயற்கை யோடிசையாத இந்நெறிகளால் மறைவு ஒழுக்கமும், பொய்ம்மையும்தான் மிகுதியாகத் தோன்றின.

வாழ்க்கையைச் சைவ சித்தாந்தம் அணுகும் முறை அறிவுக்கு இசைந்தது; நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியது; நடைமுறைக்கு இசைந்தது. வாழ்க்கையை வாழ்த்தி வரவேற்பது சித்தாந்தச் செந்நெறி. சைவ சித்தாந்த வாழ்க்கை முறை இயற்கையோடிசைந்தது.

உயிரினத்தில் இயல்பு, தனித்து வாழ்வதன்று. கூடி வாழ்தலே இயற்கையிலமைந்த வாழ்க்கைமுறை. “Man is a Social Animal” என்பது வழக்கு. மானிடச் சாதி, அன்பில்,