பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

203


நெடிய ஆக்கத்திற்குப் பயன்படுமோ அவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்துறையில் தெளிவு இல்லாது போனால் சிவத்தைக் காண்பது அரிது. தெளிவில்லாத வாழ்க்கையை அப்பரடிகள்,

“வளைத்துநின் றைவர்கள்வர் வந்தெனை நடுக்கம் செய்யத்
தளைத்துவைத் துலையை ஏற்றித் தழலெரி மடுத்தநீரில்
திளைத்துநின் றாடுநின்ற ஆமைபோல் தெளிவி லாதேன்
இளைத்துநின் றாடுகின்றேன் என்செய்வான் தோன்றி னேனே”

(அடங்கன்முறை நாலாம்திரு. பா.4927)

என்று அருமையாக விளக்குகிறார். உடலின் இதமான சுகத்தைக் கருதிப் பின்விளைவை அறியாமல் ஆமை மகிழ்ந்தாடுவதைப் போலப் பிணியும், மூப்பும், பகையும் அழிவும் சேர்க்கும் நன்னெறி சாரா உலகியலைப் பயன் எனக் கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொண்டால் வெப்ப நிலை மாற்றத்தால்-கொதி நிலையால் அழியும் ஆமையைப் போல அழிவதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு அழிவது என்பது நீங்காத துன்பத்தில் அழுந்தி அல்லலுறுவதேயாம். சிறந்த தெளிவுமிக்க வாழ்க்கையில் சிவனைக் காணலாம். அதில் சிந்தையே சிவமாக விளங்கிக் காட்சியளிக்கும்.

சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுள் சிவமுமாகி

என்று அப்பரடிகள் அருளியுள்ளமை அறிக.

உயிர், அறியும் தன்மையது; அறிவாகவே மாறி விளங்கும் தன்மையது. ஆதலால் உயிர் சிந்தனை, கற்றல், தெளிதல் ஆகிய செயல்முறைகள் வாயிலாக நன்னெறியில் நிற்றற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் வேண்டும். வாழ்க்கைக்குக் கற்றலும் கேட்டலும் இன்றியமையாதன. நாள்தோறும் முறையாகக் கற்றல், கேட்டல் செயல்