பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சேர்ந்து களித்து மகிழ்ந்தன. இதற்குத் தடையாகச்-சாதி பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் நின்றதில்லை.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே

(குறுந்தொகை 40)

அயல்வழக்கு நுழைந்தபின் திருமணங்கள் நிகழ்வனவாக இல்லை; செய்து வைப்பனவாகி விட்டன. சுந்தரர் வரலாற்றில் திருமணங்களே நிகழ்ந்தன. திருமணம் காதல் திருமணமாக அமைந்தால் தான் சிறப்புடைய வாழ்க்கையாக அமையும். இங்ஙனம் சமயம் சார்ந்த வாழ்க்கையில் கால்கொள்ளும் குடும்பம், சமுதாயத்தை நோக்கி விரிவடைகிறது.

சமுதாயம் என்பது மொழி, சமயம் அடிப்படையில் பலர் கூடி ஒத்ததறிந்து வாழ்க்கையை நிகழ்த்தும் கூட்டு அமைப்பாகும். உயர்ந்த-சமுதாய அமைப்புத் தோன்றின் வானகம் வையகத்தில் தென்படும். சிவநெறி இயல்பிலேயே சமுதாயம் தழுவிய அமைப்புடையது. ஒருமை நலம் சிறந்த, சமுதாயம் தோன்றத் தடையாய் அமைவதில் பெருந்தடைகளாய் உள்ளவை, சாதி, குல, கோத்திர வேற்றுமைகளே. இந்தப் புன்மைகள் அயல் வழக்கின் வழியதாகவே தமிழ்நெறியில் ஊடுருவின.

தூய ஒரு குல நெறியாகிய சிவநெறியை இடையில் வந்து கலந்த அயல் வழக்குக் கெடுத்து விட்டது. வடபுலத்தில் வாழ்ந்த, ஆரிய வேதகாலத்தில் வாழ்ந்த அந்தணர்கள் செய்த உபநிடதத்தில்கூட சாதி வேற்றுமைகள் இருந்ததில்லை. ஆயினும் எப்படியோ அந்தத் தீமை, பரவி மனித உலகத்தை உள்ளீடழித்து உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. சில தமிழ்