பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அவிநாசியில் ஒரு இல்லத்தில் குழந்தைக்கு நாண் மங்கல மகிழ்ச்சி! ஆரவாரம்! பிறிதோர் இல்லத்தில் குழந்தையை இழந்த துயரம், ஆரூரர், பெற்றோரை விட்டுப் பிரிந்த குழந்தையை மீட்டுப் பெற்றோரை மகிழ்வுறுத்தினார் என்பது பெரியபுராணம். ஆதலால் துன்பம் உலக இயற்கையன்று. இன்பமே உலகத்து இயற்கை என்று கருதி இன்புற்று வாழ்தல் சித்தாந்தச் செந்நெறியின் வாழ்க்கை முறை.

அடுத்து, சமுதாயத்தை நலிவுறச் செய்யும் சாதி வேற்றுமைகளைப் போலவே பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும் கொடுமையானவை. இன்று மானிடச் சாதியை- உடை யாரையும், இல்லாதாரையும் ஒருசேர வருத்துவது பொருளுடமை ஏற்றத் தாழ்வுகளேயாம். உடையாரைக் களவும் காவலும் வருத்துகின்றன. இல்லாதாரை வறுமை வருத்துகிறது; உடையார் இல்லார் வேற்றுமை, அவ்வழி கொடிய வறுமை முதலியன நிலையாகக் கால்கொள்ளு மானால் மனித மதிப்புகள் குறையும்; அறநெறியின் அடித் தளங்கள் ஆட்டம் கொடுக்கும்; சமய நெறியின் சீர்மைகள் சிதையும்; நரகத்தைத் தேடி வேறு எங்கும் போக வேண்டாம். இவ்வேற்றுமை களுக்கிடையில் மானிடர் வாழும் வாழ்க்கையே நரகமாகும்.

சிவநெறியின் சீலம் உயிரிரக்கத்தில் இருக்கிறது. யாதானும் ஒரு உயிர் துன்புறுவதைச் சிவநெறி தாங்காது. அதனாலன்றோ, குடிக்கு ஒரு ஆள் கொற்றாளாக அனுப்ப, மகவில்லாது கவலைப்பட்ட வந்திக்கு, ஆலவாய் அண்ணல் ஆளானார். நான்மாடக்கூடல் என்று பெயர் பெற்ற மதுரையில், அரச வீதியில் பன்றிக் குட்டிகள்-கண் திறவாக் குட்டிகள் தாய்ப் பன்றியை இழந்து பாலின்றிப் பரிதவித்தன. பரமாய சிவத்திற்குப் பன்றிக்குட்டிகளின் துயர் உறுத்திற்று. பாற்கடலை வழங்க முடியாது. நக்கிக் குடிக்கும் பருவம் வரவில்லை. அந்தணராக, சேவகனாக வந்து பால் வழங்கவும் முடியாது. உருவத்தைக் கண்டு அஞ்சும் குட்டி நிலையில்,