பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதன் காரணமாக அச் சமுதாயத்திற்குரிய பயன்படும் பொருள் அவரிடத்தில் வைக்கப் பெற்றுள்ளது. அப்பொருள்பயன் அவர் துய்ப்பதற்கன்று. இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதற்கேயாம்.

இந்தத் தூயஉணர்வுடன் பெற்ற பொருள்களைப் பாதுகாத்து இல்லாதார்க்கு வழங்குபவர்களுக்குச் சிவனருள் கிடைக்கும். வழங்காது காத்து வைத்து வாழும் வன் கணாளர்க்கு நரகமே கிடைக்கும். இது அப்பரடிகளின் பொருளியல் கொள்கை.

இப்பொருளியல் கொள்கையைத் ‘தர்மகர்த்தாக் கொள்கை’ என்று பிற்காலத்தில் பொருளியலறிஞர்கள் கூறினர். அண்ணல் காந்தியடிகளும் இந்தக் கொள்கையை ஆதரித்தார். அப்பரடிகள் இந்தக் கொள்கையை வகுத்துக் கூறும் பாடல் இதோ,

இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும்வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார்
பரப்நீர்க் கங்கைதன்னைப் படர்சடைப் பாகம்வைத்தார்
அரக்கனுக் கருளும்வைத்தார் ஐயன் ஐயாறனாரே”

- (அடங்கன்முறை நாலாந்திரு. - 454)

சிவநெறி, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை மறுக்கிறது. உண்மையான சிவநெறியைச் சார்ந்த சமுதாயத்தில் பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் மறையும்; மறைய வேண்டும். அங்ஙனமின்றேல் மார்க்சீயம் வாழ்வியல் நெறியாக இடம் பெறுவதைத் தடுக்கும் சக்தி யாதும் இல்லை. உண்மை உணர்க.

மார்க்சீயத்திற்கும் சிவநெறிக்கும் தத்துவ இடைவெளி மிகக்குறைவு. இதனை மார்க்சீய நெறியோடு ஒத்திட்டுப் பார்க்கவேண்டும். சைவ சித்தாந்தத்தின்படி கடவுள் மனித உலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் முழுப்பொறுப்பானவன் அல்லன். அவன் ஒரு இயக்குநன். அவன் ஒரு