பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அறவே நீக்கப்பெற்றிருக்கிறது. இந்நிலை சமுதாயத்திற்குத் தற்சார்பான வளர்ச்சியை, வலிமையைத் தராது. பழங்காலத்தில் சமுதாயக் கூட்டுப் பொறுப்பு மிகுதியாக இருந்தது. திருக்கோயில்களில் இலக்கண இலக்கியங்கள் கற்பிக்கப் பெற்றன: நடத்தப் பெற்றன; மருத்துவமனைகள் இருந்தன. ஏன்? வழக்குகளைத் தீர்த்து வைக்கும் முறையீட்டு மன்றங்களும்கூடத் திருக்கோயில்தான் நடைபெற்றன.

சுந்தரர் சிவபெருமான் வழக்கைத் திருவெண்ணெய் நல்லூர்த் திருக்கோயிலிலிருந்த முறையீட்டு மன்றம் விசாரித்து நீதி வழங்கியது என்ற வரலாற்றை உணர்க. இதே நிலை மீண்டும் திரும்ப வருதல் வேண்டும்.

திருக்கோயில்களில் எழுந்தருளியுள்ள கடவுளைத் தலைவனாகக் கொண்டு சிவநெறியைச் சார்ந்த சமுதாயம் கூடிவாழக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தச் சமுதாயத்திற்குத் தேவையான அனைத்துச் சமுதாயப் பணிகளையும் திருக்கோயில்கள் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும். இங்ஙனம் செய்வதைச் சிலர் இன்று மறுக்கின்றனர்.

“திருக்கோயில் நிதியத்தைக் கடவுள் பூசனைக்குத்தான் பயன்படுத்த வேண்டும்; வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது” என்று கூக்குரலிடுபவர்கள் இருக்கிறார்கள். மேலும் “செல்வநிலை மிகுந்துள்ள கோயில்கள், செல்வ வசதிக்குறைவான திருக்கோயில்களின் திருப்பணிக்குச் செல வழிக்க வேண்டும்” என்று கூறுகிறார்கள். இது நூற்றுக்கு நூறு தமிழகத்தின் எல்லாத் திருக்கோயில்களையும் திருப்பணி செய்து திருவருளின் பொலிவோடு வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலிடம் கொடுக்கலாம். இதைச் செய்வது சமுதாயப் பணிகளுக்குத் தடையாக இருக்காது.

‘கடவுட் பணிக்கென வழங்கப்பெற்ற நிதியைக் கடவுட் பணிக்குத்தான் செலவழிக்க வேண்டும். இதுதான் சரியான அறநெறி. கடவுட் பணியும் மக்கட் பணியும் வேறு வேறு’