பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/231

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

227


என்றெல்லாம் கூறுவர். இக்கருத்து மிகவும் தவறானது. சிவஞான மாபாடியும், இயற்றிய மாதவச் சிவஞான முனிவர் மக்கட் பணியையே கடவுட் பணியாக்கலாம் என்று கூறுகிறார். “மக்களை நோக்கிச் செய்யும் பசு புண்ணியங்களை, மக்களை மக்கள் என்று கருதாமல் கடவுளின் கருணையைப் பெறுதற்குரிய பாத்திரங்கள் என்று கருதிக் கடவுள் நினைப்போடு செய்யின் அது கடவுள் பணியேயாம்” என்று கூறியுள்ளமையை அறிக.

ஆதலால் நமது சிவநெறியைச் சார்ந்த சமுதாய அமைப்பைக் கோயிலைச் சார்ந்த குடிகளாகவும், குடிகளைச் சார்ந்த கோயிலாகவும் செழுமைப்படுத்தி வளர்ப்பதுதான் சமயம் தழுவிய சமுதாய அமைப்புக்குத் துணை செய்யும். இப்பணியில் நாம் வெற்றிபெறும் வரையில் தொடர்ந்து சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும்.

சிவநெறி அமைப்பில் அடுத்த பணிமனைகள்-சமய, நிறுவனங்கள்-திருமடங்களாகும். மானுடச் சாதி சமய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கும்பொழுது முதலில் தேவைப்படுவோர் ஞானாசிரியர்கள். ஞானாசிரியர்கள், மனிதர்களுக்குச் சமயக்கல்வியும் தத்துவ விசாரணையும் கற்றுக் கொடுத்துச் சமய வாழ்க்கையின் நுழைவுக்குரிய சடங்குகளாகிய தீக்கைகளைச் செய்வித்துச் சமய வாழ்க்கையில் ஆற்றுப்படுத்துவர். அப்பரடிகளுக்குத் திலகவதியார், “திருவாளன் திருநீறு” நல்கித் தீக்கை செய்வித்துத் திருவதிகைத் திருக்கோயிலுக்கு ஆற்றுப்படுத்திய அருமைப் பாட்டினை அறிக.

ஞானாசிரியர்களின் திருமடங்கள் மக்களைச் சமய வாழ்க்கைக்குப் பக்குவப்படுத்தும் பணியை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்கள். அவை மக்களின் சமய அனுபவங்களைக் கண்காணித்து நெறிப்படுத்தி மேலும் மேலும் வளர்க்கும் பணிக்கும் பொறுப்பு உடையன, திருக்