பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

233


மறுத்துவிட்டன. இவைகளின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றாத, அயல் நிலங்களில் தோன்றி வளர்ந்து வந்த சமயநெறிகளை இந்திய மக்கள் அவாவி அடையும் நிலை தோன்றிவிட்டது.

இன்று இந்தியாவில் பல சமயத் தலைவர்கள் வாழ்கிறார்கள். இன்றையச் சூழ்நிலையில் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடாக விளங்குவதும், இந்திய அரசு சமயச் சார்பற்ற அரசாக விளங்குவதும், தவிர்க்க முடியாதன. அதுவே நியாயமும் நீதியும் சார்ந்த முறையாகும். ஆதலால் இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடாக விளங்குவதை மனித மதிப்புகளை அறிந்தோரும், சமயக் காழ்ப்பு அற்றோரும், மனித குலத்தின் அமைதியை விழைவோரும் விரும்பி வரவேற்பது கடமை.

இந்திய நாட்டின் சூழலில் மத மாற்றங்களும், மத வெறிச் செயல்களைத் தூண்டும் பேச்சும், எழுத்தும் கட்டாயமாகத் தடைசெய்யப் பெற வேண்டும். வயது வந்தோர் தமது மதமாற்றத்திற்குரிய அவசியத்தை அல்லது விளக்கத்தை முறையாக ஒரு முறை மன்ற நடுவரிடம் எழுத்து மூலம் தெரிவித்துத் தக்க காரணங்கள் இருப்பின் இசைவு பெற்ற பிறகு மாறலாம் என்ற ஒழுக்க நடைமுறையைச் செயற்படுத்த வேண்டும்.

ஆட்டு மந்தைகளைப் போல மக்களை நினைத்து, ஆசைகளைத் தூண்டிவிட்டுத் தமது சமயத்தைச் சார்ந்த மக்கள் தொகையின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் இந்தியாவில் தமது சமய ஆதிக்கத்தை, அவ்வழி சாதி இன ஆதிக்கத்தை வளர்த்து நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு மதமாற்றங்கள் செய்ய எந்தச் சமய நிறுவனத்திற்கும் உரிமை இருத்தல் கூடாது. தொடர்ந்து இந்த மனப்போக்கை அனுமதித்தால் இந்தியாவின் புகழுக்குக் காரணமாய் அமைந்த சமயப்