பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

235


கூடிய அணு ஆயுதங்களைச் செய்து குவிக்கிறது. இந்த நிலையில் சமய நெறிகள் வாளாயிருக்குமாயின் சமய நெறிகளால் மனித குலத்திற்கு யாது பயன்? இங்ஙனம் சமய நெறிகள் தம்முள் ஒத்ததறிந்து செயற்படாமையின் காரணமாகவும் மனிதகுல மேம்பாட்டுக்குச் சமயநெறி முழுமையாகப் பயன்படாததன் காரணமாகவும் ஏமாற்றம் அடைந்த சிந்தனையாளர்கள் கடவுள் நம்பிக்கையில்லாத் வாழ்க்கை நெறிகளை, சமயம் சாராத வாழ்க்கை நெறிகளை, தத்துவங்களைக் கண்டு வருகின்றனர். இந்த அணிக்கு மார்க்சியம் தலைமையேற்றுப் பீடு நடைபோட்டு வருகிறது.

கிறித்துவ சர்ச்சுகளின் ஏகபோகத்தை-மக்கள் மன்றத்திலிருந்த தடையிலாச் செல்வாக்கை “புதுயுகப் புரட்சி” கண்ட சோவியத்துச் சமுதாயம் தடுத்து நிறுத்தி, சர்ச்சுகளிடமிருந்து மக்களைப் பிரிந்து எடுத்துச் சென்று புதிய வாழ்க்கை முறைக்கு ஆயத்தம் செய்கின்றது. இந்த வரலாற்று நிகழ்வு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கு நாம் இப்பொழுது வரவில்லை.

“கடவுள் நம்பிக்கையில்லாமல், சமயம் சார்ந்த சீலமில்லாமல், ஒரு பொதுமைச் சமுதாயத்தை அமைத்து மானுடச் சாதியை இன்பமாக வாழ வைக்க முடியும்” என்ற நம்பிக்கையை ஓரளவு மார்க்சியம் தந்துள்ளது. வரலாற்றுப் போக்கிலும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை. ஆயினும், பொது வுடைமைச் சமுதாயத்தில் எல்லா நலங்களும் எய்திய பிறகும்கூட, ஏற்படும் மனிதக் குறைபாடுகளுக்கு என்ன மாற்று? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. உலகியல், பொருளியலைப் பொறுத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை சரியானது என்றே நாம் கருதுகின்றோம்.

சிவநெறியில் உள்ள கடவுட் கொள்கை நீங்கிய பகுதி, பொதுவுடைமை என்று பெயர் பெற்றுள்ளது என்று