பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 


3


சித்தாந்தச் செந்நெறி


தோற்றுவாய்

மனித வாழ்க்கை அரியது. ஆற்றல் மிக்கது. நுட்பமானது; ஆக்கத்தின் பாற்பட்டது; அறிவுடையது; சுதந்திரமுடையது. அதேபொழுது அறிவு, ஆற்றல், இன்பம் இவற்றின் எல்லை விரிவாகும் இயல்பினது. வாழ்தல், எளிதன்று. இன்று பலர் வாழவில்லை! பிழைப்பு நடத்துகின்றனர். வாழ்வாங்கு வாழ்தல் மனிதகுலத்தின் குறிக்கோளாகும். மனிதகுலம் வாழ்வாங்கு வாழும் பொழுதே வையகம் சிறக்கும். மனித வாழ்க்கை, அழுது புலம்புவதற்காக அமைந்ததன்று. வாழ்க்கை மகிழ்ச்சியுடையது; மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இன்று எங்குநோக்கினும் அவலம்! அமைதியின்மை! கரவாடும் வன்னெஞ்சங்கள்! பொக்கம்பேசிப் பொழுது போக்கும் புல்லறிவாண்மை! ஞானத்தில் நாட்டமில்லை! அன்பில் ஆர்வமில்லை! தொண்டுநெறி தொடர்வாரில்லை! ஆதலால் இன்ப உலகம்-இன்பப் பிறப்பு, துன்பமாகத் தோற்றமளிக்கிறது. திருவருள் வழங்கிய பரிசு தண்டனையாக உருமாற்றம் பெற்றுவிட்டது! சிறை நீக்கத்திற்குக் கிடைத்த வாழ்க்கை, சிறைச்சாலைகளைப் படைத்து முடக்கிக்