பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

239


கொண்டிருக்கிறது. விடுதலைக்காக வழங்கப்பெற்ற வாழ்க்கை, கொத்தடிமைத் தனத்திற்கு ஆளாகி விட்டது: இந்தக் கொடுமையை எண்ணுமின்! இந்தப் பொய்ம்மையை நிந்திக்கக் கற்றுக் கொண்மின் ! ஒன்றாக உயர்ந்துள்ள நன்மையை நாடுமின் வழிபாடு என்பதற்கு வழிநிற்றல் என்று பொருள் கொண்மின் வழிப்படுதலே வழிபாடு ஆயிற்று. வழிப்படுதலின்றி வழிபாடு பயன்தராது. நன்றுடையான்றன் நன்னெறியின் வழி நின்று செயற்படுதலே வழிபாடு! உழைத்து உய்யும் தொண்டுநெறி தொடர்தலே வாழ்க்கை! அந்நெறி நிற்க முயற்சிசெய்வோமாக!

மனித குலத்தின் தேவை சமயம்

மனித வாழ்க்கையில் சமயம், தேவையில் மலர்ந்த ஒன்று. உடலியல் வாழ்க்கை ஐம்பூதங்களைத் தேவையாக வுடையது. உடல், எப்பொழுதும் தனக்கு இன்பத்தையே எதிர்பார்க்கும் இயல்புடையது. ஆன்மா, இதற்கு எதிரியல்புடையது. ஆன்மா உயிர்ப்புள்ளதாக இருப்பின் பிறர் நலத்தையே நாடும். வளரும் ஆன்மாவில் மலர்ந்த தேவையின் விளைவே சமயம். சிற்றறிவின் தேக்கத்தைத் தெரிந்து பேரறிவாகிய ஞானத்தின் பாற்கொண்ட நாட்டமே சமய உணர்வு முகிழ்த்த இடம். சமயம் என்பது வளர்ந்த ஆன்மா தன்னுடைய வளர்ச்சியைப் பாதுகாத்துக்கொள்ளவும், மேலும் வளரவும், முழுமைப் படுத்திக்கொள்ளவும் துணையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை முறை; தன்னுணர்வினாலேயே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு; மனித உயிர்கள் மதிப்புக்களைக் கடந்தவை. அவைகளை ஆதரித்து ஆக்கம் தருவது முதற்கடமை. அங்கனம் ஆக்கம் தரத் தவறிவிட்டால் அன்பு ஊற்றுத் தோன்றாது; வறட்சி தலைகாட்டும்; வம்புகள் தோன்றி வையகம் துயருறும், சமயம் ஒரு முழுத்தத்துவம்; அது வளர்ச்சிக்குத் துணை செய்கிறது; பாதுகாப்புத் தருகிறது; துய்ப்ப்பும் வழங்குகிறது; வாழ்விக்கிறது. சென்ற காலத்