பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

245


இயைவாக நிற்கும் ஆற்றலே இறை. அவ்வாற்றல் குறை விலாதது; நிறைவுடையது; தற்சார்பில்லாதது; பொதுமைத் தன்மையது; பழமையானது; ஆனாலும் புதுமைப் பொலிவுடையது. அதுவே கடவுள்! கடவுள், விருப்புகளுக்கு அப்பாற்பட்டது; வெறுப்புகளுக்கு அப்பாற் பட்டது; எல்லை கடந்தது; தோற்றமில்லாதது; அழிவில்லாதது இயல்பியல் பேரறிவினது; பேராற்றலுடையது; அறத்தின் திருவுரு அன்பின் ஆக்கம்; அருளின் பொழிவு; தாயிற் சிறந்த தயாவுடையது; உயிர்களைத் தொடர்ந்து சுழன்று வருவது; உயிர்களை எடுத்தாள்வது; தூசு துடைப்பது; துன்பத்தைத் தொலைப்பது; வாழ்க்கையை வழங்குவது; இடையறாத இன்ப அன்பில் உயிர்கள் திளைக்கத் துணை செய்வது! இது சித்தாந்தச் செந்நெறி காட்டும் கடவுள் இலக்கணம். சித்தாந்தச் செந்நெறியில் கடவுள் இன்பத்திற்கே உரியவன்; இன்பத்தையே வழங்குபவன். அவன் பார்வையில் நரகமில்லை! ஏழை இல்லை-செல்வந்தன் இல்லை! ஓருலகம்! எங்கும் ஒருமை! எதிலும் இன்பம்! இதுவே அவன் ஆனந்தக் கூத்து.

சமயங்களிடையே சைவம்

சமயங்கள் அமைந்து கிடக்கின்ற நிலையினை நோக்கின் சித்தாந்தச் செந்நெறியே செந்நெறி; அதற்கு ஈடானதொரு சமயம் இதுவரையில் தோன்றவில்லை. இந்தச் சித்தாந்தச் செந்நெறியின் தெள்ளிய ஓடை சுமார்த்தக் கலப்பால் கலங்கியிருக்கிறது! கலக்கத்திலிருந்து தெளிவு காண்மின்! வேதாந்தத்தின் பயனாகவுள்ள சைவ சித்தாந்தப் பயன் கொண்மின் !

நாம் இங்ஙனம் கூறும்பொழுது மனிதகுல ஒருமைப் பாட்டுக்கு எதிராகச் சமய வேற்றுமைகளை வற்புறுத்திச் சிற்றெல்லைகளைப் படைப்பதாகச் சிலர் கூறக்கூடும்; அது முற்றாக ஒரு பொய்; நாம் என்றுமே மனிதகுல ஒருமைப்