பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

21


என்றார் மாணிக்கவாசகர். ஆதலால் சமய வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. உலகம் முழுதும் உலாவிய சான்றோர்களின் மெய்யுணர்வுக் காட்சிக்கேற்ப வேறுபாடு இருத்தல் இயற்கை. ஆனால், இந்த வேறுபாடு ஒருமை நோக்கிய வேறுபாடேயாம். மனித குலத்தை வேறுபடுத்தும் வேறுபாடன்று. அதனால்தான் வள்ளற்பெருமான், சமய நெறிகளையும் கடந்த பொதுநெறி வேண்டுமென்றார். மனித குலத்தை நெறிப்படுத்தத் தோன்றிய சமயநெறிகள் ஆன்மநேய ஒருமைப் பாட்டில் உயிர்க்குலத்தை நிறுத்தி நன்னெறியில் செலுத்தத் தவறி விட்டதால் சமய நெறிகளையும் கடந்த பொதுநெறி வேண்டுமென்றார்; அவரவர் மேற்கொண்டொழுகும் சமய நெறியில் “ஆழங்கால்பட்டு நிற்றல்” வாழ்க்கை முறை. இது நிகழ வேண்டுமாயின் யாதொன்றின்பாலும் வெறுப்புக் கூடாது.

தமிழர் சமயம்

தமிழினம் காலத்தால் முந்தித்தோன்றிய மூத்த இனம்; இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பேசும் மொழிக்கு இலக்கணம் கண்ட இனம்; உலகில் எல்லா மொழிகளுக்கும் இலக்கணம் உண்டு. ஆனால் தமிழினம் மக்களின் வாழ்க்கை நெறிக்கும் இலக்கணம் கண்டது. தமிழினத்தின் சிந்தனை உயர்வுக்கு, பண்பாட்டு ஆர்வத்திற்கு இவை சிறந்த எடுத்துக்காட்டுகள். தமிழினத்தின் வாழ்வியற் செப்பம் காலங்கடந்தது. வரலாற்றாசிரியர்களின் வரையறைகளைக் கடந்தது. இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வாழ்க்கை நியதியைத் தமிழினம் ஆட்சிகளின் மூலம் பெறவில்லை; அச்சுறுத்தல் மூலம் பெறவில்லை. அந்தப் பண்பாடு இயல்பான படிமுறை வளர்ச்சியாகும். பழந்தமிழ் இலக்கணங்களும் சங்க இலக்கியங்களும் வாழ்க்கையில் தோன்றியவை வாழ்க்கை அனுபவத்தில் முகிழ்த்தவை. அவை சுற்றிச்சுற்றி வந்து வாழ்க்கையையே நெறிமுறைப்படுத்துகின்றன. நெறி நின்றோர்