பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

247


வளர்ச்சி வரலாற்றுப்போக்கில் சமயம் வழங்கிய கொடையேயாம்.

சைவத்தின் தொன்மையும் மேம்பாடும்

தமிழினம் காலத்தால் மூத்தஇனம்; கருத்தாலும் மூத்த இனம். உலகத்தின் மற்ற மனித இனங்கள் நாகரிகத்தில் அடியெடுத்து வைப்பதற்குமுன்பே நாகரிகத்தின் முதிர்ச்சியாகிய, சமயநெறியினில் தமிழினம் சிறந்து விளங்கியது. இற்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொல்காப்பியத்தில் சமயத் தத்துவங்களும் கொள்கைகளும் பேசப்படுகின்றன. அதுவும் சித்தாந்தச் செந்நெறியின் அடிப்படையில் பேசப்பட்டுள்ளன. இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடத்தில் சிவபெருமான் வழிபாடு இருந்தது. சிவத்தைத் திருவுருவில் எழுந்தருளச் செய்து, திருக்கோயில் அமைத்து வழிபட்ட பெருமை தமிழருக்கே உரியது.

பணியியர் அத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே!

(புறம்-6)

என்ற புறநானூற்றுப்பாடல் இதற்குச் சான்று. தொன்மைமிக்க சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம். ஆங்கு முக்கட் செல்வர் வழிபாடு இருந்தமையை அகழ்வுப் பொருள்கள் அறிவுறுத்துகின்றன. எனவே தமிழர் சமயம் தொன்மையானது; அஃது அவர்கள் இன வழி வந்தது. அவர்களுடைய சமயநெறி எந்தவோர் இனத்தினிடமிருந்தும் பெற்றதன்று. அவர்களுடைய மறைகள் தமிழ்மறைகளேயாம். அவை தமிழ் முனிவர்களால் செய்யப் பெற்ற மறைகளேயாம். தமிழ் மறைகள் என்பன இறைவன் கல்லாலின் நீழலிலிருந்து நான்கு முனிவர்களுக்கும் அறம், பொருள், இன்பம் வீடு என்பன குறித்து அருளிச் செய்தவையாம். தமிழ்மறைகள் என்பன இன்று வழக்கிலுள்ள ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களைக்