பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறிக்கமாட்டா. இதனைப் “பண்பொலி நான் மறை” “முத்தமிழ் நான் மறை” என்ற திருஞானசம்பந்தரின் திருவாக்கால் உணர்க!

சமய அனுபவம்

சமயநெறி என்பது ஒருவகை வாழ்க்கைமுறை என்பதை மீண்டும் நினைவிற்கொள்க! சமயம், உயிரின் அனுபவத்திற்குரியது. சமயம் என்பது எழுத்திலும் சொல்லிலும் நின்றுவிடுவதன்று; இவைகளைக் கடந்த அனுபவ நிலை. சமய அனுபவத்தின் வாயில்கள் அறிவு, அன்பு ஆகியனவாம்! அறிவு, ஞானத்தை நல்கும். அன்பு, தவத்தினைத் தரும், தொண்டிற் செலுத்தும். உயிர், ஒன்றாக இருக்கும் சிவத்தில் ஒன்றித் திளைத்துப் பெறும் அனுபவமே சிவானுபவம்! இவ்வனுபவத்தின் பயனாகப் பொருள்களின் போக்கு மடை மாறும்; தன்மை மாறும். முரண்பாடுகளும் விகாரங்களு முடையனவாயிருந்த பொறிகள், புலன்கள் “அன்பே ! அன்பே!” என்று நினைந்து அரற்றியதால் செழுமையுற்று இறைவனும் ஏனை அனைத்துயிர்களும் சுவைத்து மகிழுதற்குரியனவாக நயம்பட அமைந்த நிலையே சிவானுபவ நிலை. வழிபாடு என்பது, உயிர் சிவத்தோடு ஒன்றுதற்குச் செய்யும் முயற்சி. சிவத்தின் தன்மைகளை ஈர்த்துத் தன்னுரிமையாக்கிக்கொண்டு ஆவியோடு ஆக்கை புரைபுரை கனியச் செய்யும் செயற்பாடே வழிபாடு!

வழிபாடு கடவுளுக்காகச் செய்யப்படுவதன்று; கடவுளை முன்னிட்டுச் செய்யப்படுவது. அதன் பயன் கடவுளுக்கன்று; உயிர்களுக்கேயாம். சிவத்தை உள்ளத்தில் எழுந்தருளச் செய்து, உற்று நோக்கி அகத்தில் துளும்பியெழும் நிறையன்பால் முழுக்குச் செய்து, நிறையறிவால் அருச்சிப்பது ஞான வழிபாடு! இதனையே அகப்பூசையென்பர். திருக் கோயிற் பூசனையைவிட அகப்பூசையே உயர்ந்தது; சிவம் விரும்புவது எது என்பதைப் பூசலார் நாயனார் வரலாற்றின்