பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/253

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

249


மூலம் உணரமுடிகிறது. ஆனால் இன்று அகப்பூசை செய்வார் யார்? அந்த நுண்ணிய கலைஞானத்தைக் கற்றுத் தருவாரைக் கூடக் காணோம். நமது சமய அனுபவ உலகத்தில் ஒரு சூன்யம் தோன்றுகிறது. பக்தியியக்கம் ஞானத்தின் முயற்சியைத் தடுத்து விட்டதோ என்ற ஐயம் தோன்றுகிறது. சமய வாழ்க்கைக்குப் பக்தி தொடக்கத்தில் துணை செய்யலாம். ஆனால் ஆன்மாவின் ஈடேற்றத்திற்கு அது முழுமையாகத் துணை நிற்கமுடியாது. “ஞானத்தாலன்றி வீடுபேறில்லை” என்ற ஆன்றோர் வாக்கை எண்ணுக!

அகப்பூசை முதலியன இன்று எல்லாரும் நிகழ்த்துதற்குரியது. அதற்குரிய காலமும் இல்லை; கருத்தும் உருவாகவில்லை. ஆயினும் திருவாசகம் போன்ற ஞானநூல்களை ஓதுகின்ற ஞானவேள்வியையாவது நிகழ்த்துங்கள்! அட்டோத்திரத்தில் சிக்கி அல்லற்படுவதை விட, சகஸ்ர நாமத்தில் சிக்கிச் சங்கடப்படுவதைவிடத் திருவாசகத்தை ஓதி, ஊனும் உயிரும் கரைந்து திளைப்பது சிறந்த ஞான சாதனம். சமயம் அனுபவத்திற்கு வந்தாலொழிய ஆன்மா பயனுறாது.

ஞானம்

“அறிவே தெய்வம்!”, “அறிவே கடவுள்!” என்று புதுமைவாதிகள் சிலர் இன்று ஆரவாரம் செய்கின்றனர். ஆம்! அறிவே தெய்வம்! இது புதிய கொள்கையன்று. இது தமிழகத்தின் பழைய கொள்கை எது அறிவு: கற்பது அறிவா? அறிவுதான்! ஆனாலும் கற்பது அறிவின் வாயிலே தவிர அறிவே ஆகிவிடாது. அதுமட்டுமன்று. இன்று அறியாமையே அறிவு என்ற பெயரில் “ஆட்டம்” போடுகிறது. இந்த “அறி” வெல்லாம் கடவுளாகிவிடமுடியுமா? அறிவு வளர்தலுக்குரியது. “அறிதோ றறியாமை” என்பார் திருவள்ளுவர். அறிவின் முகட்டுக்கு மனிதகுலம் சென்றடைந்துவிட முடியாது. இவர்கள் ஏற ஏற அது உயர்ந்துகொண்டே