பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

251


அவர்கள் எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் காட்டுவர். எக்காரணம் கொண்டும் மனிதர்களை வேற்றுமைப்படுத்தி ஒதுக்கமாட்டார்கள். குலத்தில் பொல்லாரேனும் குணத்தில் பொல்லாரேனும் அவர்கள் மாட்டும் இரக்கம் காட்டுவர். அவர்கள் படும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதி உடன் மாற்ற முயலுவர். முன்னை வினையைக் காரணமாகக் காட்டியோ “ரேஷன் கார்டு கதை” சொல்லியோ மற்றவர்களை ஏமாற்றிவிட்டுத் தங்களுக்கு மட்டும் கட்டணங்கள் வசூலிக்கமாட்டார்கள்!

நமது திருமுறை வரிசை, ஞானத்தில் தொடங்கித் தொண்டில் நிறைவுறுகிறது. திருஞான சம்பந்தரின் தமிழ் ஞானத் தமிழ், சேக்கிழாரின் செந்தமிழ் தொண்டுத் தமிழ். ஞானம் தொண்டில் நிறைவுறும். ஞானத்தின் பயன் திருத்தொண்டு. திருத்தொண்டின் பயன் இன்ப அன்பு. “தொண்டலால் உயிர்க்கு ஊதியம் இல்லை” என்பார் அப்பரடிகள். ஆக, தொண்டு நிலையே வீடுபேறு என்றாற்போல ஆகிறது. பர சிவமும் தொண்டிற்குரிய தகுதிகளை வரிசையறிந்து வழங்கும் பேற்றினைப் பெரிய புராணத்திற் காண்கிறோம். அப்பரடிகளின் கைத்திருத் தொண்டுக்கு வாசியில்லாக் காசு வழங்கியமையை நினைவுகூர்க! தொண்டர்க்குத் தொண்ட ராதல் போல-ஆரூரர்க்குத் தோழராகிப் பல்வகைப் பணிகளைப் பாங்குடன் செய்தமையை மறப்பார் யார்? மறுப்பார்யார்? திருத்தொண்டு பல திறத்தது. வகையில் வேறுபாடின்றி வாயில்கள் ஒன்றேயாம்! விளையும் பயனும் ஒன்றே யாம்! ஒன்று இறைவனை முன்னிட்டுச் செய்யும் திருத் தொண்டு! பிறிதொன்று இறைவனின் கருணைக்குப் பாத்திரமாகும் உயிர்களின் நலம் நோக்கிச் செய்யும் திருத்தொண்டு! திருக்கோயிற் சார்பான திருத்தொண்டு இரண்டுக்கும் சார்புடையது.

கடவுளுக்குச் செய்யும் தொண்டுகளும்கூடப் பெயராலும் தோற்றத்தாலும் கடவுளுக்குச் செய்யும் தொண்டுகள் போலத் தோற்றமளிக்கின்றன. ஆனால் உண்மையில் அது