பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

253


கூறுகிறது, “இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்” என்று! அதனினும் உயர்ந்தது ஒப்புரவு ஈதற்பண்பு. உடையார்-இல்லார் என்ற வேற்றுமையில்லாது உரிமை யுடையார் ஒருவருக்குப் பொறுப்புடையார் வழங்குவதை யொத்தது. இப்பொழுது நம்மிடத்தில் பொருள் இல்லை. உடன் வந்துள்ள உதவியாளரிடம் பணம் இருக்கிறது. நாம் கேட்கும்பொழுது அவர் தருகிறார். அல்லது குறிப்பறிந்து தருகிறார். இங்கே ‘தருதல்’ எந்த மனநிலையில் நிகழ்கிறதோ அதே மனநிலையில் நிகழும் ஈதலேதான் அப்பரடிகள் கூறும் ஈதல்! ஆதலால், ஒப்புரவு என்பது இதனினும் உயர்ந்தது. அங்கே தருதல் இல்லை. அன்பிலும் அறவுணர்விலும் விளைந்த உரிமையால் - வழங்கப்பெற்ற உரிமையால் எடுத்துக்கொள்வது!

ஒப்புரவு அதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துக் காட்டும் உவமைகள் அனைத்தும் எடுத்துக்கொள்ளும் வினைத் தொடர்பாகவே அமைந்துள்ளன. ‘ஊருணி”, “பயன்மரம்”, “மருந்து மரம்” இனையனைத்திலும் நாம் மேவிச்சென்று எடுத்தே பயன்படுத்து கிறோம். அவை வழங்கிய கொடைக்கு மாறாக நாம் அவற்றைப் புகழ்ந்து நன்றி கூறுதலாகிய சடங்குகள் இல்லை. இத்தகைய சமுதாய ஒழுக்கம், சைவ ஒழுக்கம், தமிழுலகம் தந்த நன்னெறி, தமிழ்ச் சான்றோர் தந்த பொதுநெறி. இப்பொதுநெறி, வாழ்க்கையில் வெற்றி பெறுமானால் அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகள் சுருங்கும்; பிணக்கும் குறையும்; பகை நீங்கும்; பண்பாடு தோன்றும்; வாழ்க்கை சிறக்கும். இத்துறையில் ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பத்தினரும், அறநிறுவனத்தினரும், சமுதாயத்தினரும் இயன்றவரை செயற்படுதல் வேண்டும். அப்பரடிகள் திருநாளன்று தம்முடைய உடைமையில்-உரிமையில் பிறிதொருவருக்கு உரிமையும் வளமும் வாழ்வும் வழங்க வேண்டும். இந்நெறிமுறை தூண்டுதலின்றியும் கட்டாயமின்றியும் இயல்பாக நடைபெறுதற்குரிய பக்குவத்தை நாம் பெறவேண்டும்.