பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/259

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

255


வேண்டும். அஃது ஒரு நல்ல அமைப்பு. தொடர்ந்து போராடி அந்த அமைப்பைப் பாதுகாத்து இயக்கினால் காலப் போக்கில் திருமடங்களும் மக்களும் ஒத்திசைந்த சமயப் பேரியக்கம் தோன்றும்.

திருக்கோயில்கள் நமது பண்பாட்டை வளர்க்கும் பண்ணைகள். நமது உணர்வுகளைத் தொட்டுத்திருத்திச் செழுமைப் படுத்தும் திருவருளின் ஊற்றுக்கண். நமது சமுதாயத்தின் வாழ்வியல் மையமாகத் திருக்கோயில்களே விளங்கின. ஆனால் இன்று, அவை சமுதாயத்தை விட்டு விலகிச் சமுதாயத் தொடர்பில்லாமல் தன்னிச்சையாகத் தனித்தியங்கும் நிறுவனங்களாகிவிட்டன. இதன் காரணமாகத் திருக்கோயில் ஆட்சி முறையில் வணிக மனப்பாங்கும், இலாப நோக்கும், தொழில் மனப்பான்மையும், அரசியல் கட்சிகளின் தலையீடும் தோன்றிவிட்டன. இன்றையச் சூழ்நிலையில் திருக்கோயில் உருவ அமைப்புகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் உணர்வுக்குத்தான் வழியில்லை. எந்தவொரு திருக்கோயிலும் எந்த நோக்கத்திற்காகத் தோற்று விக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற் கிசைந்தவாறு செயற்படவில்லை. தத்துவங்களின் செயல்முறைக் களங்களாக விளங்கிய திருக்கோயில்கள் இன்று தத்துவத்தையும் மறந்து விட்டன. செயல்களையும் மறந்துவிட்டன. சமுதாய ஈடேற்றத்தைக் குறிக்கோளாகக் கொண்டு தொடங்கிய திருக்கோயில்கள், இன்று சமுதாயத்தை மறந்துவிட்ட தோடன்றிச் சமுதாயத்தைப் பிறிதின் கிழமையாக்கி அதனிடம் எந்தெந்தக் கட்டணம் வசூலிக்கலாம் என்று திட்டமிடத் தொடங்கிவிட்டன. சமநிலை காண வேண்டிய திருக்கோயில்கள் தரம் பிரித்து விட்டன. ஒருவருக்குத் திருக்கோயிலில் ஏகபோக மரியாதை மற்றொருவருக்குத் திருநீறுகூடக் கிடைப்பதில்லை. இந்த வேறுபாடு திருக்கோயில் தத்துவத்திற்கே முரணானது. எனவே சமய நம்பிக்கையும் தத்துவப் பிடிப்புமுடையவர்கள், நமது சமய