பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

259


செய்யட்டும். நமது சமயத்தத்துவங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் அனைத்தும் நம்பிக்கைக்குரியன. நல்லெண்ணத்திற் குரியன; நடைமுறைக்கிசைந்தன. அவற்றில் காலத்திற்கு ஒவ்வாத பழமை எதுவும் இல்லை. இன்றையச் சூழ்நிலையில் அவாவி நிற்கும் புதுமை எதுவுமில்லை. அந்த அளவு நமது சமயம் இன்றையக் கால எல்லை வரையில் தேவைகளை நிறைவு செய்யத் தக்கதாக முழுமையுற வளர்ந்திருக்கிறது. அதனாலன்றோ “சித்தாந்தம்” என்று பெயர் சூட்டினர்; “முடிந்த முடிவு” என்று பாராட்டினர்.

ஆனாலும் நம்முடைய சமய வாழ்க்கை நம் தத்துவங்களுக்கு இசைந்தவாறு அமையவில்லை. நம் மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் காட்டுகிற வழியில் இன்றையச் சமய வாழ்க்கை இல்லை. சமுதாய வாழ்க்கை அமைப்பு முறை இல்லை. இந்தக் குறையை நாம் உள்ளவாறு உணர்தல் வேண்டும். நாம் ஒன்றும் புதுப்புரட்சி செய்யவேண்டாம். அதற்கு நாம் தகுதியாகவுமில்லை. ஆனால் நம்முடைய திருமுறைகள் இதுதான் நெறி-சமயவாழ்க்கை முறை என்று உபதேசித்தும் நாயன்மார்கள் வாழ்ந்து காட்டியுமுள்ள நெறி முறைகளை நாம் பின்பற்ற வேண்டாமா? நாம் அந்நெறியிலிருந்து நெடுந்துாரம் விலகிச் சென்றிருந்தாலும் நம் தவறுகளைத் திருத்திக்கொண்டு, சீர்த்திருத்தம் செய்துகொண்டு திருமுறை நெறியில் நின்றொழுக வேண்டாமா? ஆதலால் சீர்திருத்தம் நமது சமயத்திற்கும் தேவையில்லை. நமது தத்துவங்களுக்கும் தேவையில்லை. நமது கொள்கைகளுக்குப் புதிய கொள்முதல் வேண்டாம். ஆனால் நமக்குச் சீர்திருத்தம் தேவை. நமது சமுதாய அமைப்பிற்குச் சீர்திருத்தம் தேவை. நமது சமுதாய நிறுவனங்களின் நடைமுறையில் சீர்திருத்தம் தேவை. இவற்றைப் பற்றி எண்ண வேண்டாமா? உண்மையைச் சாதிக்கும் முனைப்பு வேண்டாமா? அன்புகூர்ந்து இந்த நேரத்தில் சிந்தனை செய்யுங்கள்! எத்தனையோ சீர்திருத்தக் கருத்துக்கள் குறித்து எண்ண அலைகள் மோதுகின்றன. அவற்றில்