பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

261


யாரையும் வழிபடலாம்; இருவரையும் வழிபடலாம்” என்றெல்லாம் எடுத்துக் கூறி, சமுதாயம் பக்தி வழியில் வளர இயலாதபடி செய்துவருகின்றனர்.

சமரசம் என்பது தன்னுடையது மீது பற்றும் இன்னொருவருடையது மீது வெறுப்பும் இல்லாதிருப்பதுதான்! ஒரு நங்கை கொழுநன், கொழுந்தன் ஆகிய உறவுகளைப் பேணலாம். ஆனால் இருவரையும் கொழுநன் நிலையிலேயே சமரசமாக எண்ணிப் பார்க்க முடியுமா? அதாவது கொழுநனும் ஆடவன்தான்; கொழுந்தனும் ஆடவன்தான்; ஆதலால் இவனும் கணவனாக இருக்கலாம். அவனும் கணவனாக இருக்கலாம். இரண்டு பேருங்கூடக் கணவன்மார்களாக இருக்கலாம் என்று நினைப்பதே எத்துணைப் பைத்தியக்காரத்தனமானது. இப்படிப் பைத்தியக்காரரை வெளியில் நடமாட விடுவோமா? “இவரையும் தொழலாம்” என்று சொல்லும் பைத்தியக்காரரைக் கீழ்ப்பாக்கத்திற்கு உடனே அனுப்ப வேண்டாமா? .

கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால்,நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின் இறைவா!
உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாது எங்கள் உத்தமனே!

என்ற மணிவாசகர் மணிமொழியையும்,

நயவேன் பிறர்பொருளை நள்ளேன்கீ ழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்-வியவேன்
திருமாலை அல்லது தெய்வம்என்று ஏத்தேன்
வருமாறு நம்மேல் வினை

என்ற ஆழ்வார் திருப்பாடலையும் அன்புகூர்ந்து எண்ணுங்கள்! எந்தக் கடவுளின் திருமேனியைத் தொழுதாலும்