பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பரம்பொருள். அவனுக்கு எல்லா மொழிகளும் உரிமையுடையன. மொழி வடிவம் பெறாத உயிரினத்தின் ஒலிக் குறிப்புகள் கூட இறைவனுக்கு மொழிகளேயாம். சேரமான் பெருமான் நாயனாருக்கு இதையறியும் திறனிருந்தது. அப்படியானால் எந்த மொழியில் வழிபட்டால் என்ன? என்று சிலர் வினா எழுப்பலாம். ஆம் உண்மைதான்! கடவுளைப் பொறுத்த வரையில் எந்த மொழியிலும் வழிபடலாம். தாய் எந்த உணவையும் உண்ணலாம். குழந்தையின் நலம் நோக்கும் தாய் குழந்தை நலத்திற்கேற்ற உணவை உண்ணவேண்டும். வழிபாடு செய்வது உயிர்கள் துய்மையுணர்வையும் இறைவன் அருளையும் நாடிப்பெறுவதற்குத்தான். உயிர்களுக்குரிய மொழி, தாய் மொழியேதான்! அதனால் தாய் மொழியில் நிகழ்த்தும் வழிபாடுதான் கனிவைத் தரும்; இறையருளைக் கூட்டுவிக்கும். அதிலும் நமது சமயம் தமிழிலேயே தோன்றித் தமிழை வளர்த்ததாகும். நமது சமய நெறி, பிறமொழியிலிருந்து வந்ததன்று. ஆதலால் தமிழ் மொழியில் வழிபாடு என்பது ஒரு “வழி பாட்டியக்கம்” என்பதை மறந்துவிடக் கூடாது.

சாதிகளற்ற சமுதாய அமைப்பு

நமது சமயம் தீண்டாமையினாலும் சாதி வேற்றுமைகளாலும் உள்ளீடழிந்து வருகிறது. இவ்விரண்டும் தீமைகளிலுமிருந்து முற்றாக நமது சமுதாயம் விடுதலை பெற்றால் தான் நமக்கு எதிர்காலமுண்டு. பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை, சாதி வேற்றுமைகள் பாராட்டுவது நியாயமுமன்று; நீதியுமன்று. அப்பரடிகள் முதலாக வள்ளலார் ஈறாகச் சாதிவேற்றுமைகளை எதிர்த்துப் போராடியும் நாம் இன்னும் சாதிகளைவிடத் தயாராக இல்லை. ‘சாதி வேற்றுமைகள் பாராட்டுதல் தீது’ என்பதை எடுத்துக்காட்டச் சிவபெருமான் திட்டமிட்டுச் சுந்தரர் திருமணங்களை நிகழ்த்தி வைத்திருந்தும் நாம் அதைப் பின்பற்ற மறுக்கிறோம். நம்மிடமுள்ள