பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எளிமையான முறையில் வழிபாடு செய்யவேண்டும். “யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை” என்ற பெரு நெறியும், உள்ளக் கோயில் வழிபாடும் பெருகி வளர வேண்டும். கடவுள் வழிபாட்டின்பேரால் காசுகளை வீணாக்குவது தேவையில்லாதது. சமய நிறுவனங்களின் பொருள்களும், சமுதாயத்தின் சேமிப்புப் பொருள்களும் நமது சமுதாயத்தின் மேம்பாட்டுக்குப் பயன்படும் வகையில் திட்டமிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு இனி ஒழுங்குபடுத்தப்பட்ட சமய இயக்கமும் முறைப் படுத்தப்பெற்ற சமய அறமும்தான் பாதுகாப்பளிக்கும் என்பதை நினைவிற் கொள்க!

சமயநெறியாளர் சிந்தனைக்கு

இன்றையச் சமுதாய அமைப்பு, வேற்றுமைகள் நிறைந்ததாக இருக்கிறது; பிணக்கும் பகையுமுடையதாக இருக்கிறது; உடையாரும் இல்லாருமாக மாறுபட்டு இயங்குகிறது. இவற்றின் காரணமாகச் சிக்கல்களும் ஏராளம்! இன்றையச் சமுதாயம் ஒட்டுமொத்தமாகச் சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்தச் சிக்கல்கள் எதனால் தோன்றின? யாரால் தோன்றின? இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு எத்துறைக்கு இருக்கிறது? என்று வினவின் இன்றைக்கு உள்ளவாறு உணர்ந்து விடை சொல்வார் அரிது. ஒவ்வொரு துறையினரும் மற்ற துறையினர்மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளவே முயற்சி செய்வர். ஆனால் இந்த வினாவுக்குரிய விடையை ஐயத்துக்கிடமின்றி “Every political Question is becoming a social question, and every social question is becoming a religious question” என்று R.T. Ely என்பவர் கூறுகிறார். அதாவது இன்றைக்கு எந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டாலும் சமய நெறியாளர்கள் அது அரசியல் பிரச்சனை என்று கூறிவிடுகிறார்கள். அங்ஙனம் அவர்கள் கூறிவிடுகிறார்களே யன்றி,