பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/287

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

283


மாறுபாட்டுக்குக் காரணம் என்று உணரவேண்டும். அது மட்டுமின்றி வேறுபடக் கருதுவது வளர்ச்சிக்கும் தூண்டு கோலாக அமைகிறது. ஏன்? எதனால் என்ற கேள்விகளின் மூலமே தத்துவஞானம் வளர்ந்திருக்கிறது-அறிவியலும் வளர்ந்திருக்கிறது. மனிதகுலம் கருத்தைப் பரிமாறிக்கொண்டு வளர வேண்டுமென்பதே நமது கொள்கை.

கடிகாரமும் அரசியலும்

கடிகாரம் அரசியலைச் சார்ந்தது. எனவேதான் காலத்தைக் காட்டி, தான் காலங்கடத்துவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறது. மதம் காலம் கடந்தது என்று இராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்கள். மறுக்கவில்லை! உண்மைதான்! மதம் காலங்கடந்த தத்துவம்; காலத்துக்கு அப்பாற்பட்டது அகப்படாதது. ஆனால் ஒரு கடிகாரம் செய்வதற்குப் பயன்பட்ட அறிவில்-சிந்தனையில் மாறுபாடற்ற அருளியலின் தொடர்பு-மாறிலாத அன்பின் சாயல்-அருளியலின் சாயல் உண்டு. அன்பியலில்-அருளியலில் இறைவன் சாயல் இரண்டறக் கலந்திருக்கிறது. எனவே சிந்தனையால் அறிவால் கடிகாரத்தை ஒருவன் செய்தபோதிலும் அதற்கும் தூண்டுகோல் தெள்ளிய அறிவு. தெளிந்த அறிவு வேறு, அருளியல் வேறல்ல. தூய அறிவே உருவானவன் ‘இறைவன்’, ‘வாலறிவன்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

நந்தியும் அறமும்

சிவன் கோயிலுக்குச் செல்கிறோம். உள்ளே நுழைவதற்குமுன் வழியில் நந்தியைக் காண்கிறோம்- வணங்குகிறோம்-நாம் மாட்டை வணங்குவதாகக் கூறுவர் ஒருசிலர்! உண்மையிலேயே அது மாடா என்ன? எந்த உருவத்துக்குப் பின்னும் ஒரு கருத்து உண்டு. அந்த நந்தி- காளை அறத்தின் வடிவம் அறத்தின் சின்னம்.