பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

287


1962-லும் பிச்சைக்காரனாகவே இருக்கிறான். அவனுடைய வாழ்வு வளரவில்லை; வளம் பெறவில்லை. வாழப் பிறந்தவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி மகிழ்வது மகேசுவரனுக்குப் பிடிக்காத ஒன்று என்பதை உணர்த்த விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் அறிவுக்குப் பஞ்சமில்லை. ஆண்மைக்குப் பஞ்சமில்லை. திறமைக்குப் பஞ்சமில்லை எனினும் முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் கிடையாது-அக்கறை இல்லை. நாள்தோறும்-நாழிகை தோறும்-மேனாட்டு நாகரிகம் புதுப் புதுக் கோலத்தில் நம் வாழ்வில் கலக்கிறது. ஆனால், மனிதனை மனிதனாக வாழ வைக்கும் பண்பு வளரவில்லை-மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்யும் நாகரிகம் இடம் பெறவில்லை.

பைபிளின் சமயத்தைக் குடிசைகள்தோறும் தூக்கிச் சென்று பரப்புகிறார்களே! அதுபோல திருவாசகத்தைக் குடிசைகள்தோறும் தூக்கிச் சென்று “சிவநெறியை” வளர்க்க வேண்டும் என்ற விழுமிய விருப்பம் தோன்றவில்லை.

ஆணவம் குறைய வேண்டும். அதற்குத் தொண்டுள்ளம் வேண்டும். திருத்தொண்டின் வழிநிற்றலே அருளியலுக்கு ஆக்கம்; அழியும் உடலுக்கு ஊதியம் பொருள்; உயிருக்கு ஊதியம் தொண்டு. “தொண்டல்லாது உயிர்க்கு ஊதியம் இல்லை” என்றார் நாவுக்கரசர்.

துறவு என்றால் உலகத்தைத் துறப்பதல்ல-தன்னலத் துறவே துறவு. தன்னலம் வேண்டாம் என்று கூறவில்லை - கூறவும் முடியாது. தன்னலம் இருக்கட்டும்; ஆனால், வேலி அமைத்துக்கொள். அது பிறர் நலத்தில் கைவைக்காத அளவுக்கு இருக்கட்டும். இல்லையென்று கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாது கொடு. இறைவன் திருவருள் பாலிப்பார்.


இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும்வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநரகங்கள் வைத்தார்