பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றார். பழமை-புதுமைப் பிணக்கு பழங்காலத்தில் தமிழகத்தில் இருந்ததில்லை. வாழ்க்கை வேறு, சமயம் வேறு என்ற வேறுபட்ட நிலையும் இருந்ததில்லை. கலை, வாழ்க்கை இவ்விரண்டுக்குமிடையே இன்றுள்ள முரண்பாடுகளும் அன்று இருந்ததில்லை. முரண்பாடுகள் அனுபவமின்மையின் விளைவுகளே; பழங்காலத் தமிழர் வாழ்வியல் அறிவாராய்ந்த அனுபவத்தின் வழிப்பட்டதாயிருந்ததால் அன்று முரண்பாடுகள் இருந்ததில்லை. அதுமட்டுமன்று, வாழ்க்கை வாழ்வதற்கே மரணத்திற்கு அன்று என்பது பழந்தமிழர் கொள்கை.

வாழ்வாங்கு வாழ்க

என்று திருக்குறள் வழி நடத்தும்.

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்[1]

என்று அப்பரடிகளின் அருள்நூல் ஆற்றுப்படுத்தும்.

இயற்கையோடிசைந்த வாழ்வியல் நெறி

தமிழர் சமயம் வாழ்க்கையைப் புறக்கணிப்பதன்று. ஆனாலும் வாழ்க்கையில் ஆழ்ந்து கிடப்பதுமன்று. தமிழர் சமய வாழ்க்கை இன்பியல் வாழ்க்கையே. ‘வாழ்க்கை துன்பமானது’ என்ற கருத்து, பழங்காலத்தில் இருந்ததில்லை. ஒரோவழி உலகில் துன்பமாக இருந்தாலும் அதை இன்பமாக மாற்றவேண்டுமென்பதே பழந்தமிழர் கோட்பாடு.

ஓரில் நெய்தல் கறங்க வோரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார் புறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்கிதன் இயல்புணர்ந் தோரே,[2]

என்ற பக்குடுக்கை நன்கணியார் பாடல் ஓர்ந்துணரத்தக்கது.

  1. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 784
  2. புறம், 194.