பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/308

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆங்கிலத்திலே சொல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த வைதிகச் சமயத்துக்கு அல்லது அந்தச் சடங்குச் சமயத்துக்கு (Orthodox Religion) என்று சொல்வார்கள். அது செத்துத்தான் போகும். அது நீண்ட நாட்கள் உயிர் வாழ்வது என்பது முடியாத காரியம். ஆனால், அதே காலத்தில் அறிவோடும் அனுபவத்தோடும் உலகியலோடும், மனோதத்துவத்தோடும் தொடர்பு கொண்ட மனப்பக்குவ ரீதியாக இருக்கின்ற ஆன்மநெறி இருக்கிறதே- உயிரியல் நெறி இருக்கிறதே அது வாழத்தான் செய்யும். அது வாழ வேண்டிய அவசியம் அவைகளுக்குத் தானாக வந்துவிடும். திரும்ப விஞ்ஞானிகள் அந்தத் திசை நோக்கிப் போவார்கள். எனவே, உங்களுக்குத் தெரியும் தொட்டதெல்லாம் பொன்னான கதை, கேள்விப் பட்டிருப்பீர்கள். இளம் பிளையாகப் படிக்கின்றபொழுது ஒரு மனிதனுக்குப் பொன்னிலே பொருளிலே ஆசை நிறைய இருந்தது. இறைவனைப் பார்த்து வரங்கேட்டான் தனக்குத் தொட்ட தெல்லாம் பொன்னாக வேண்டுமென்று. மனிதனுடைய ஆசைக்கு எல்லை கிடையாது; கங்கு கிடையாது; கரை கிடையாது. அந்த ஆசையினாலே தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று கேட்ட பிறகு இறைவனும் அந்த வரத்தைக் கொடுத்தான். அவன் எல்லாவற்றையும் தொட்டான். கதவு ஜன்னல் எல்லாவற்றையும் தொட்டு முடித்த பிறகு எல்லாம் தங்கமயமாகி விட்டது. பன்னிரண்டு மணி ஆயிற்று. வயிற்றுப்பசி வந்தது. இலையிலே சோற்றைப் போட்டுத் தொட்டான். அதுவும் தங்கமாயிற்று. அவனுக்கு ஆத்திரமாக வந்தது. இல்லை வருத்தப்பட்டான்; இரக்கப் பட்டான்; கழிவிரக்கம் கொண்டான். ‘அப்பா ! இறைவா! எனக்குப் பொன் வேண்டாம்; என்னுடைய அனுபவத்தைக் கொடு; எனக்கு அனுபவித்தல் போதும். கஞ்சியானாலும் கூழானாலும் நான் அனுபவித்து வாழ்ந்தால் போதும்’ என்று திரும்பக் கேட்டான் என்ற வரலாற்றைக் கேள்விப்