பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

27


வாழ்க்கையை இன்பமயப்படுத்தும் பொருள்களைத் திருவருளாகவே நினைத்து பாராட்டுதல் நமது நூன்மரபு. “வாசமலரெலாம் ஆனாய் நீயே”[1] என்று இயற்கையையும், “பண்ணிடைத் தமிழொப்பாய்”[2] என்று கலையையும், “பழத்தினிற் சுவையொப்பாய்”[3] என்று சுவையையும், “ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ”[4] என்று மனை வாழ்க்கையையும் பாராட்டுவது அறிந்து ஓர்க.

சைவ-சமணப் போராட்டம்

பழங்காலத்தில், தமிழகச் சமய நெறியாளர்கள் பிறநெறியாளர்களோடு காழ்ப்புக்கொண்டு மோதியதில்லை. ஆயினும், பண்ணோடு தமிழும், இயற்கையோடிசைந்த வாழ்க்கையும், அகனைந்திணை ஒழுக்கமும் மாறுபடுமோ என்ற அச்சம் வந்தபொழுது இவற்றுக்கு எதிராகத் தமிழ் வழக்கிற்கு மாறாகப் புகுந்த அயல்வழக்கை எதிர்த்துத் தமிழ் வழக்கை நிலைநிறுத்த வேண்டியதாயிற்று. இந்தப் பணி சமயக்களத்திற் செய்யப்பெற்றாலும் அது முற்றாகச் சமயப் பணிமட்டுமன்று. அஃதொரு சிறந்த சமுதாயப் பணி, வழிவழி வந்த தமிழ் நாகரிகத்தை அாண்செய்து காப்பாற்றிய அருந்திறற் பணி,

இடையிற்புகுந்த தீண்டாமை

சமய வழிப்பட்ட தமிழர் சமுதாயத்தில் பிறப்பினால் அமைந்த சாதி வேறுபாடுகள் இருந்ததில்லை. தொழிலினால் அமைந்த வேறுபாடுகள் இருந்தன. ஆயினும் தமிழகத்தில் அயல் வழக்கு நுழைவதற்கு முன் தீண்டாமை இருந்ததில்லை. தீண்டாமை தமிழ்க்குடியில் இருந்த தீமையன்று இடையில் வந்தது. தீண்டாமை தமிழ்ச் சமுதாயத்தில் ஊடுருவிய காலந்தொட்டு அதனை அகற்ற அவ்வப்போது போராட்டம் நிகழ்ந்து வந்திருக்கிறது. ஆயினும் நலன்களின் அடிப்படையில் தீண்டாமை முற்றாக அகலவில்லை; முன்பு, உயர் சாதி

  1. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 380,
  2. சுந்தரர், 294.
  3. சுந்தரர், 294.
  4. திருநாவுக்கரசர், ஆறாந்திருமுறை, 929.