பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/318

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

314

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடியும். இந்த உலகத்தில் விஞ்ஞானிகள் கூட குறிப்பிட்ட காலக்கட்டம் போகிறபொழுது கையை விரிக்கிறார்கள். நுணுக்கத்திலே நுணுக்கமாகப் பார்க்கிறபொழுது இந்த அழகு கைபுனைந்தியற்ற முடியாதது-இந்த வண்ணம் சிற்பியால் தீட்ட முடியாதது-இந்த அமைப்பை மனிதனால் செய்ய முடியாது. அப்படியானால் யார் செய்தது என்று பார்க்கின்றபொழுது என்னுடைய அறிவால் சொல்ல முடியாத-என்னுடைய அனுபவத்தால் எட்டிப் பிடிக்க முடியாத ஏதோ ஒரு சக்தி-ஏதோ ஒரு அறிவாற்றல் இருப்பதை உணர்கிறேன். அதை உணர்ந்து அந்த வழியிலே தொடர்ந்து முயன்று கொண்டிருப்பவனுக்குத்தான் விஞ்ஞான அறிவியல் மேதை என்று பெயர். இலட்சியக் கோடு ஒன்று இருக்கிறது. இலட்சியப் பேரறிவு ஒன்றிருக்கிறது. ஒரு பேராற்றல் இருக்கிறது.

அருளியல் என்ற நீரோடை - ஆற்றோடை உடனாகவே சென்று கொண்டிருந்தால்தான் இந்த அறிவியல் உலகம் அமைதியாக-சமாதானமாக வாழமுடியும். அப்படிப் பார்க் கின்றபொழுது அறிவியலும், அருளியலும் ஒன்றாக இணைந்து வாழவேண்டியவைகள், மதியும் அதனுடைய ஒளியும்போல, கதிரவனும் கதிரொளியும்போல ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவைகள். ஒன்று வளர்ந்தால் ஒன்று வீழும் என்றோ, அல்லது ஒன்று வீழ்ந்தால் ஒன்று வளருமென்றோ கருதுவது தவறு. அறிவியல் வளர்ந்தால் அருளியல் தளரும் என்று சொல்கிறவர்கள் விஞ்ஞானத்தில் இளைஞர்கள். அறிவியல் வளர்ந்தால் அருளியல் பொய்யாகி விடுமென்று அஞ்சுகிறவர்கள் சமயத் துறையில் மூடநம்பிக்கை உடையவர்கள். இரண்டு பேருமே நாட்டுக்கு நல்லன செய்கிறவர்களல்லர். சமயத்துறையில் தெளிவும், உறுதியும், அனுபவமும் இருக்குமானால் உலகத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. சந்திர மண்டலத்துக்குப் போய் வந்திருக்கிறான் என்று சொன்னால், சந்திரனைத் தேவதையாக்கி