பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/327

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

323


ஒருவர் மிக அழகாக வீணையை மீட்டினால், அதை மீட்டுகின்றவர்களுக்கும் பெருமை, வீணைக்கும் பெருமை. அந்த வீணை இசையைக் கேட்டு மகிழ்கிறவர்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சி. அதேபோல ஒரு வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஓர் ஆன்மீக வாழ்க்கை-சமய வாழ்க்கை-ஒரு கடவுள் நம்பிக்கை உடைய வாழ்க்கை என்று சொன்னால், அந்த வாழ்க்கை வீணை வாசிப்பதைப் போன்ற வாழ்க்கையாக அமைய வேண்டும். அந்த வாழ்க்கையை மற்றவர்கள் பார்த்தால் மகிழ வேண்டும்.

இயற்கையாக, மனிதனுக்கு மற்றவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் மகிழ்ச்சி வராது. காரணம், அவன் அழுக்காறோடு கூடப் பிறந்தவன். அவனுக்கு ஒன்று இல்லை என்று கூடக் கவலைப்படமாட்டான்; மற்றவர்க்கு வந்திருக்கிறதே? அதனால் எனக்கு வேண்டும் என்று கவலைப்படுவான். அவனுக்கு எப்பொழுதும் மற்றவரைப் பற்றித்தான் கவலையே தவிர, அவனைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. சின்னப் பையன் கூடச் சொல்லுவான். அடுத்த வீட்டுக்காரன் வைத்திருக்கிறான்; அதனால் வேண்டும் என்று சொல்லுவான். ஆகையால் நம்முடைய ஆவல்கள் பெரும்பாலும் நம்முடைய தேவையை நோக்கித் தோன்றுவன அல்ல. மற்றவர்கள் பெற்றிருக்கிறார்களே, அதுபோல நமக்கு வேண்டும் என்று அழுக்காற்றுப் போக்கில் தோன்றுகின்ற பாவனை கூட எனலாம். சில பேர் இப்போது அதற்குக் கூடச் சமாதானம் சொல்லத் தொடங்கி யிருக்கிறார்கள். அது நல்லதன்று. நல்ல காரியங்கள் செய்வதில், கல்வியில், புகழில் இதிலெல்லாம் சிறிது பொறாமை இருந்தால் தவறில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. ஆனால் அது அவ்வளவு நல்லதன்று எந்தத் துறையில் இருந்தாலும் அழுக்காறு அழுக்காறுதான். அழுக்காறு என்று சொன்னால் அழுக்கு வழி என்று பொருள். எண்பது மதிப்பெண் வாங்கியிருக்கிற