பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒரு காலத்தில் நாம் கடிதத் தலைப்பில் சிவமயம் என்று எழுதுவது உண்டு. இப்பொழுது சிறைமயம் என்று எழுதினால்கூட தவறில்லைபோல் தெரிகிறது. ஒன்று, சிறைச்சாலையின் சாவிகள் காவலர்கள் கையிலே இருக்கின்றன. நம்முடைய மனைகள், மடங்களின் சாவிகள், இன்றைக்கு நாம் நியமித்த காவலர்கள் கையிலே இருக்கின்றன. ‘பத்திரமாகப் பூட்டிக் கொள்’ என்று சொல்லாமல் படுத்துத்தூங்க யாரும் போக முடிவதில்லை. இந்த அளவுக்கு மனித உலகத்தினுடைய நாகரிகம் ஏன். குறைந்தது என்று கேட்டுப் பார்த்தால், வாழ்க்கையில் எதற்கு முதன்மை கொடுக்க வேண்டுமோ, அதற்கு முதன்மை கொடுக்காமல், வாழ்க்கைக்குக் கருவிகளாக, சாதனங்களாக இருப்பவைகளுக்கு அதிக முதன்மை கொடுத்திருக்கிறோம் என்பது புரியும். எல்லாவற்றிற்கும் மேலாக விலை மதிக்க முடியாதது நம்முடைய உயிர். உயிர்களினுடைய தரமும், தகுதியும் உயர வேண்டும். அது உயர்வதற்குத்தான் வழிபாட்டையே நாம் செய்கிறோம். கடவுள் வழிபாடு என்பதின் பொருளே கூட, கடவுளின் வழி நிற்றல் என்பதுதான். வழிபடுதல் என்று சொன்னால் வழிப்படுதல் என்று பொருள். கடவுளுக்கு என்று சில வழிகள் இருக்கின்றன. என்ன வழிகள்? அவன் குறைவில்லாதவனாக இருக்கின்றான்; குற்றங்கள் இல்லாதவனாக இருக்கின்றான்; நிறை உடையவனாக இருக்கின்றான்.

வாழ்க்கைப் பயணம் என்பது எதற்காக? குறை உடையவர்கள், தங்களை நிறை உடையவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்ள மேற்கொள்கின்ற பயணத்திற்கு வாழ்க்கைப் பயணம் என்று பெயர். ஏதோ ஒரு குறை இருக்கிறது. அந்தக் குறையை நிறை உடையதாக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறோம். உடல் குறையுடையவர்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றார்கள்; உணவுக் குறை உடையவர்கள் போதிய உணவு எங்கே கிடைக்கும் என்று