பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/331

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

327


தேடுகிறார்கள்; அறிவுக் குறையுடையவர்கள் அறிவு எங்கே கிடைக்கும் என்று தேடுகிறார்கள்; சில பேர் எது நிலையான குறை என்று தெரிந்துகொண்டு, மற்ற குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல், நிலையான குறை ஒன்றை மாற்ற முயற்சிக்கிறார்கள். தனித் தனியே பொருள், தனித்தனியே பணம், தனித்தனியே காசு இவைகளைத் தேடுவதைவிட, ஆன்மாவினுடைய, உயிரினுடைய தரத்தைக் கூட்டுவதன் மூலம் அனைத்தும் கிடைக்கும். காரணம், ஆன்மா தரப்படுகிறது என்று சொன்னால், அதற்குரிய ஆற்றல் தரப்படுகிறது.

பொறிவாயில் ஐந்தவித்தான்

என்பார் திருவள்ளுவர். ‘அவித்தான்’ என்று சொன்னவுடன் சிலபேர் அதை அழிக்கவே முயற்சி செய்கிறார்கள். சிலபேர் சாப்பிடுவதே இல்லை; காரணம், நோன்பு இருக்கிறேன் என்று சொல்லுவார்கள். சிலபேர் நன்றாகத் தூங்குவதே இல்லை. காரணம், நான் கண் விழித்துச் சாமி கும்பிடுகிறேன் என்பார்கள். இப்படி வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி என்னென்னவோ தண்டனைகளை எல்லாம் அனுபவிக்கிறார்கள். ஆனால் தண்டனைகளை அனுபவிப்பதன் மூலம் இறைவனை நாம் மகிழ்விக்க முடியாது. நெறியில்லா நெறி தன்னை நாம் நம்பக்கூடாது. ‘விரதங்கள் எல்லாம் மாண்ட மனத்தான் கண்டாய்’ என்பார்கள். ‘பொறிவாயில் ஐந்து அவித்தான்’ என்று சொன்னால் இந்த மெய், வாய், கண், மூக்குச் செவிகளை ஒன்றும் துய்க்காமல், மகிழாமல் அழிப்பது என்று பொருள் இல்லை. இங்கு அவித்தல் என்ற சொல், பக்குவப்படுத்துதல், என்றுதான் பொருள்படும். நெல் அவித்தல், கிழங்கு அவித்தல் என்பார்கள். இந்த நாட்டிலே செல்வாக்கான பலகாரம்-இடியாப்பம் அவித்தல் என்று சொல்வார்கள். எனவே, அவித்தல் என்று சொன் னால் உண்பதற்குரிய முறையிலே பக்குவப்படுத்துதல்