பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/335

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

331


விலங்குகளுக்கு அன்பு இருக்கிறது. ஒரு நாய், குட்டி போட்டவுடனே மிகவும் அன்பாக வளர்க்கிறது. ஓர் ஆறு மாதம் கழித்து அந்தக் குட்டிக்கு வயது வந்த பிறகு, காலத்தின் வேற்றுமை காரணமாக இந்த நாயும் அந்த நாயும் சண்டை போட்டுக் கொள்கின்றன. விலங்குகளிலே கூடப் பார்க்கலாம். ஒரு பசு, கன்று ஈனுகிறது. இரண்டு ஆண்டு கழித்து அந்தப் பசுவுக்கும், கன்றுக்கும் தாய்-மகன் உறவு இருக்காது. திரும்பவும் முட்டிக்கொள்ளும். சில சமயத்தில் உறவுகள் கூடக் கொள்ளும். ஆதலாலே, விலங்குகளுக்குக் காலத்தைக் கடந்து காட்டுகிற அன்பு, காலத்தை வென்று காட்டுகிற அன்பு, இவைகளெல்லாம் கிடையாது.

மனிதனுக்கும் கூட இப்பொழுது காலத்தை வென்று இருக்கிற அன்பு இருக்கிறதா? கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. மனிதன் என்று சொன்னால் அவனுடைய அன்பு காலத்தை வென்றதாக இருக்க வேண்டும்; எல்லைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும்; வரையறைகளைக் கடந்ததாக இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாது போனால், இவனும் கூட விலங்குகளைப் போலத் தாழ்ந்தவன்தான். சுற்றத்தார் என்பதற்காக ஒரு பற்று, சுற்றத்தார் இல்லை என்பதற்காக ஓர் அன்பு இருக்குமானால் எல்லைகளைக் கடந்த அன்பு இல்லை. எங்கே அறிவும் நன்றாக வேலை செய்கிறதோ, அங்கே சூழ்நிலைகளைக் கடந்தும் அன்பு காட்டுவார்கள். தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகள், ஒரு முப்பது ஆண்டுகள் சேர்ந்தாற்போல் அன்பு உடையவர்களாக இருந்தால், தெய்வம்போல் கும்பிடலாம் போல் தெரிகிறது. இருபத்தைந்து ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் பழகி, வளர்ந்து, இரண்டு பேரும் ஒரு சேர வாழ்ந்து, அதற்குப் பிறகு கொஞ்சம் கூட முனைமுறியாமல், இருப்பார்களானால் அவர்களைத் தெய்வம்போல நாம் பாராட்டலாம். நாட்டில் அறுபதுக்கு அறுபது மணிவிழாச் செய்வார்கள். தம்பதிகள், திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்து