பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

31


வேளாளர் குலங்களில் பிறக்கவைத்துத் திருமணங்களை நிகழ்த்தி வைத்த திருவுள்ளக் குறிப்புத்தான் என்னே! அது மட்டுமன்று, பிறப்பின் வழிச் செய்யப் பெற்ற திருமணத்தை ஏற்பாடு செய்யும்வரை தடுத்து நிறுத்தாதிருந்து தக்க நேரத்தில் அத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதேன்? சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்ற உண்மையினை உலகுக்கு உணர்த்தத்தானே! அப்பூதியடிகள்-அப்பரடிகள் உறவு சாதி வேற்றுமையை அகற்றும் திருப்பணிக்கோர் எடுத்துக்காட்டு. ஆனால், யார் எதைச் செய்தாலென்ன? நம்மிடையேயுள்ள சாதி வேற்றுமை அகலாது போலத் தெரிகிறது. நம்முடைய சமய வழிப்பட்ட சமுதாயத்தில் சாதி வேற்றுமை அகன்றால்தான் அதற்கு எதிர்காலம் உண்டு. அப்பொழுதுதான் இந்து சமுதாயம் கடலெனச் சூழ்ந்து வாழும்; வளரும்.

செல்வத்துப்பயன்

நம் சமயம், செல்வமுடைமையை, அதன் பயனைக் கணித்து நோக்கிய பாங்கு மிக உயர்ந்த பாங்கு. அந்த வகையில் உலகத்தின் எந்தக் கருத்துக்கும் நம் சமயக்கருத்து தாழ்ந்ததன்று. மார்க்சின் சிந்தனைக்கும் நம் சமயச் சிந்தனைக்கும் கூட அடிப்படையில் முரண் இல்லை. ஆனால் கோட்பாடுகளில் மாறுபாடு உண்டு.

செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே[1]

என்று புறநானூறு காட்டிய அறநெறி நினைந்து நினைந்து மகிழத்தக்கது. செல்வத்தைப் பெற்றவரே அச்செல்வத்தின் பயனைத் துய்த்தல் என்பது தமிழ் வழக்கன்று செல்வம், மற்றவர் துய்ப்பதற்கு வழங்கப்படவேண்டும் என்பது மரபு. அதுவே சைவத்தின் சீலம்; வைணவத்தின் வாழ்வியல் முறை. அதனாலன்றோ இறைவனுக்குரிய திருப்பெயர்களில் 'நீல

  1. புறம். 189