பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாசறை. அது நெடிய காலத்திற்குத் தமிழகத்திற்கு எந்த அளவுக்கு ஒத்துவரும், என்ற நம்பிக்கை அண்ணா அவர்கட்குக் குறைவாக இருந்து அதன் காரணமாக, அதிலிருந்து வந்த பொழுது ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பது நம்முடைய ஆன்றோர் கொள்கை, இந்த நெறியை நாம் பின்பற்ற வேண்டும் என்று தெளிவாகவும், துணிவாகவும் தம்முடைய தம்பிகளுக்கு அவர் வைத்தார் என்று சொன்னால், அந்த நெறியைக் கூடத் தந்தது செழுந்தமிழ் வழக்கு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, தமிழைச் சொல்ல வந்தேன் என்று சொன்னால் அதனோடு சமயம் என்பதையும் சேர்த்து நண்பர் பெருமாள் அவர்கள் சொல்லியிருந்தால் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்திருக்கும். எனவே, செழுந்தமிழ் வழக்கு என்று சொன்னால், அது ஒரு சைவம், அது ஒரு சமயம் என்று பொருள்.

உலகிலேயே இன்றைக்கும். கூட எடுத்துக் கொண்டாலும் உலகப் பொதுமொழி என்று பேசப்படுகிற ஆங்கிலமானாலும் சரி, மொழிக்கு இலக்கணம் உண்டு; சொல்லுக்கு இலக்கணம் உண்டு. ஆனால் மனிதர்கள் வாழுகிற நெறிக்கு இலக்கணம் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இங்குதான் தொல்காப்பியன் முதன்முதலாக வாழ்க்கைக்கும் இலக்கணம் செய்தான். வாழ்க்கைக்கு இலக்கணம் கண்ட அதுவும் இன்றல்ல, நேற்றல்ல-மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பு இலக்கணம் கண்ட பெருமை, நம்முடைய தமிழுக்கு உண்டு என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும் என்பது என்னுடைய விழைவும், விருப்பமும் கூட ஆக, ஒருவனும் ஒருத்தியுமாக மனையில் கூடி வாழ்கின்ற வாழ்க்கைக்கு, அகத்திணை என்றும், அவர்களே சமூகத்தில் கொள்கின்ற உறவுகளுக்கும், பொருள் செயல் வகைக்கும், செருக்களங்களுக்கும், ஆட்சிக்கும் அரசியலுக்குமாகப் ‘புறத்திணை’ என்றும், இரண்டு இயல் இலக்கணங்களை நம்முடைய நாடு