பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/356

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழைப் பிரிக்கிறோமோ, அன்றைக்கு இரண்டுக்கும் அதில் விபத்து ஏற்படும் என்பதை நான் உணர ஆசைப்படுகிறேன்; உணர்த்தவும் ஆசைப்படுகிறேன்.

மொழி வாயில் என்பதே ஒரு நாகரிகத்தை ஊட்டுவதற்காக, வளர்ப்பதற்காகத்தானே தவிர, மொழி ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்காக மட்டுமன்று. இந்தத் துறையில், தமிழ் இலக்கியத்திலே நான் வரிசைப்படுத்திக் கொண்டு போனால், ஏராளமான சான்றுகளை என்னால் சொல்ல முடியும் ஒளவைப் பாட்டியார் இருக்கிறார். சாவா மருந்தாகிய நெல்லிக்கனி கிடைத்தது அதியமானுக்கு! இன்றைக்கு யாருக்குத்தான் சாகப் பிரியம். நிறையப் பேர் இன்றைக்குச் ‘சாக வேண்டாம்’ என்ற நினைத்தாலும் சாவு வருகிறது. சிலபேர் செத்துப் போக வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள்; சாவு வரமாட்டேன் என்கிறது என்பர். சில பேர் பொய்ம்மையாகச் சொல்லுகிறார்கள், செத்துப் போனால் தேவலாம் என்று. ஆனால், அதியமானுக்கு ஒரு நெல்லிக் கனி கிடைத்தது. சாவைத் தடுக்கும் நெல்லிக்கனி, அதை உண்டால் பன்னெடுங்காலம் வாழலாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால், மண்ணை ஆளுகின்ற ஓர் அரசன் வாழ்வதைவிட, மாத்தமிழை ஆளுகின்ற ஒரு கவிதை மூதாட்டி-ஒளவைப் பாட்டியார் வாழ்வது, நாட்டிற்கு நலன் தரும் என்ற நம்பிக்கையால், ஒளவைப் பாட்டிக்குக் கனியினுடைய இரகசியத்தைத் தெரிவிக்காமலேயே அதியமான் கொடுத்து விடுகிறான். அவள் வாங்கி உண்கிறாள். அதற்குப் பிறகு இந்தக் கனி உண்டவர்கள் நெடுநாள் வாழ்வார்கள் என்று சொல்லுகிறான் அதியமான். ஆக, ஒரு மண்ணை ஆளுகின்ற அரசன், தான் வாழ்வதைவிட, மாத்தமிழை வாழ்விக்கிற ஒரு கவிதைச் செல்வி, கவிதை அரசி, வாழ்வது பெரிது என்ற கருத்தில் கனியைக் கொடுக்கிறான். உடனே அம்மையார் பாடுகிறார்கள். எவ்வளவு அருமையான கற்பனை வளம் என்று பாருங்கள்.