பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/358

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விட்டது’ என்று அலறுகிறார்கள். பெருமான் பார்த்தார். சிரித்த முகத்தோடு இந்த அமரர்கள் அசுரர்கள் வாழட்டும் என்ற பெருமிதத்தோடு, அந்த நஞ்சை வாரி உண்கிறார். வாழ்க்கைத் துணை நலமாக அமைகிறவளின் கடமை தன்னுடைய கணவன், துணைவன் சாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது; எந்தவிதமான சோதனைகள் இருந்தாலும் அவள் தொடர்ச்சியாகத் தன் தலைவனுடன் இருக்க வேண்டும்; நிழல் போல இருக்க வேண்டும். இது நம்முடைய பெரிய புராண வரலாற்றில் மட்டுமன்றி, இறைவன் இறைவி வரலாற்றிலும் பார்க்கிறோம். உண்ட நஞ்சு தொண்டைக்குள் இறங்குகின்ற நேரத்தில், உமையம்மை ஓடி வந்து, கழுத்தைப் பிடிக்கிறாள். பிடித்ததின் காரணமாக நஞ்சு அங்கே தங்கி விட்டது. அது நீலகண்டம் ஆயிற்று கருத்த கண்டம் ஆயிற்று கருணைக் கண்டம் ஆயிற்று. உடனே அமுதம் தோன்றியது. சிவபெருமான் எங்கே? என்று தேடிப் பார்ப்போரையே காணோம். தெளிவாகச் சொன்னால் சிவபெருமானை மறந்து கூடப் போய்விட்டார்கள் போல் தெரிகிறது. அமுதம் தோன்றியவுடன் எல்லாரும் ஓடிப் போய் அமுதத்தை உண்ண ஆரம்பித்தார்கள்; குடிக்க ஆரம்பித்தார்கள்.

இளங்கோவடிகள் இந்த அருமையான கற்பனையை நினைத்து நினைத்து மகிழ்ந்து பாடுகிறார்.

விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும் உண்ணாத
நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்

என்கிறார். சாவா மருந்தைச் சாப்பிட்டவர்கள் எல்லாம் செத்துப் போனார்கள். சாவதற்கே உரிய நஞ்சைக் குடித்தும் நீ வாழ்கிறாய் என்று சொன்னால் அது இறைவன் என்கிற ஒரு காரணத்தினால் மட்டும் இல்லை. இறைவனுக்கு இருக்கின்ற சில குணங்கள், சில இயல்புகள்தான் காரணம். தாம் வாழ்வதைவிட மற்றவர்கள் வாழ்வது பெரிது என்று நினைக்க வேண்டும். அப்படி வாழ்கிற வாழ்க்கைதான்