பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கண்டம்’ என்ற திருப்பெயர் புகழுடையதாயிற்று. அமிழ்தத்தை மற்றவர் உண்ணத் தந்து, யாரும் உண்ண முடியாத நஞ்சினை உண்ட கருணையின் சீலமல்லவா நீலகண்டம்! ஒப்புரவு நெறியும் அதுவே. அதனலன்றோ இளங்கோவடிகள்,

விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்[1]

என்று குறிப்பிடுகின்றார். உண்பித்து உண்பவனே வாழ்பவன், இங்ஙனம் உழைப்பினாலாய பொருளை மற்றவர்கள் ஆரத்துய்க்குமாறு வழங்குவது தவமேயனையது என்பதைப் பெரியபுராணம் உணர்த்துகிறது. இத்தகு தவத்தினைச் செய்வோர் நெஞ்சத்தில் இறைவன் எழுந்தருள்வான். இறைவன் ஓங்கி உயர்த்திப் பிடித்துள்ள கொடி ஆனேற்றுக் கொடி அவன் உவந்து எழுந்தருளி வருவதும் எருதேயாம். ஏன்? இந்த உலகில் கடுமையாக உழைக்கும் உயிர்க்குலத்தில் எருதே சிறப்புடையது. எருதுகளின் அயராத உழைப்பில் செந்நெல் விளைகிறது; செங்கரும்பு விளைகிறது. ஆனால் விளையும் சுவைமிக்க உணவுப் பொருள்களை எருதுகள் மனித குலத்திற்குக் கொடுத்துவிடுகின்றன. மாறாக அவை பெற்றுத் தின்பது சுவையற்ற வைக்கோலேயாம். இங்ஙனம், முறையாக உழைத்து, அந்த உழைப்பில் விளைந்த பயனை மற்றவர்க்குத் துய்க்க வழங்கும் பொருளே தவம். அத்தகு தவமுடையார் நெஞ்சிலே இறைவன் என்றும் எழுந்தருளியிருப்பான் என்பது இடபவாகனத்தின் தத்துவம். இந்த உயர்ந்த தத்துவம் கொள்கை, சமய வாழ்க்கையில் இன்று அமையவில்லை. மாறாக, வெள்ளியில், தங்கத்தில் இடப வாகனங்கள் வந்துவிட்டன. செல்வத்தை வழங்கி வாழும் வாழ்வியலைச் சார்ந்த பொருளாதாரக் கொள்கையில் ‘தர்மகர்த்தா’ கொள்கை என்பது ஒன்று. அண்ணல் காந்தியடிகளுக்கு இது பிடித்தமான கொள்கை, இந்தத் தர்மகர்த்தா கொள்கை பிறநாடுகளில் கருக்கொண்டது பதினான்கு,

  1. சிலப்பதிகாரம் வேட்டுவ வரி, 21,