பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/371

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

367


அன்புடை’ என்கிறார். அம்மையாரும் ஒப்புக் கொள்கிறார்கள். திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. சிவபெருமானுக்குச் சில சமயம் கிண்டல், கேலி இவைகளெல்லாம் செய்யத் தோன்றும். ஏனென்றால் வாழ்க்கையோடு இசைந்த சமயம் நமது சமயம். சமயத்தைக் கொண்டு போய் எங்காவது கருவறையிலும், கைலாயத்திலும் வைத்துவிட்டு, சுவைத்து, இரசித்து, வாழத் தெரியாமல் கிடந்து தொல்லைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் போய் மெள்ள என்ன சொல்லுகிறார்? சங்கிலியாரிடமும் போய் மெள்ளக் காதைக் கடித்து, ‘அவன் திருவாரூர்மேல் கொஞ்சம் கிறுக்கும், பைத்தியமும் உடையவன். திடீரென்று திருவாரூருக்குப் போனாலும் போய் விடுவான். எனவே நீ போய்த் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை என்று சத்தியம் வாங்கிக் கொள்’ என்று சொல்லி விட்டார். இந்த அம்மையாரிடம் சுந்தரர் போகிறார். இந்த அம்மையார் சத்தியம் கேட்கிறார்கள். சுந்தரருக்கும் தர்ம சங்கடம்; அரைச் சங்கடமாகப் போய் விட்டது. திருவாரூருக்குப் போகாமல் இருக்க முடியாது. சங்கிலியாருடன் திருமணம் ஆக வேண்டும். ஆதலால் என்ன செய்கிறார்? ‘சரி’ என்று ஒப்புக் கொள்கிறார்.

நம்முடைய மாசுகளுக்குக் கூட, கடவுளிடத்திலே ஒளிக்காமல் பேசினால் நன்மை கிடைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ‘சங்கிலியார் என்னிடம் சத்தியம் கேட்டிருக்கிறாள். நானும் ஒத்துக் கொண்டேன். ஆனால், உன் முன்னால் சத்தியம் செய்து கொடுத்து விட்டு மீறுவது என்றால், என்னவோ போலச் சங்கடமாக இருக்கிறது. அவளோ நல்ல பக்திமான். உன் முன்னால்தான் சத்தியம் கேட்பாள். நான் சத்தியம் செய்கிற நேரத்தில், சிறிது கோயிலை விட்டு வெளியே வந்துவிடு’, என்று கேட்கிறார். எவ்வளவு சுதந்தரமான ஒரு பக்தி இருக்கிறது என்று பாருங்கள்! இதைப் படிக்கும் போது நமக்கு அழுகையும்