பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செல்வக் குறியீட்டுமுறை பண்டு இருந்ததில்லை. நமது சமய வழிப்பட்ட சமுதாயப் பணிகள் அறநெறியாகவே கருதப்பெற்றன. சிலர் இந்த உயர்ந்த கொள்கைக்கு மாறாக ஏழ்மையென்பது தீவினையின்பாற் பட்டது; அதை அவர் துய்த்துத்தான் ஆகவேண்டுமென்பர். அது தத்துவ இயலுக்கு ஒவ்வாத நெறிமுறைக்கு மாறுபட்ட சிந்தனை. ஒருவர் தீவினையால் அல்லலுறுவதைக் கண்டும் அதை அப்போதே மாற்ற முனையும் நல்லெண்ணம் பெறாததும் ஒருவகையில் தீயூழே. உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டும் அதனை மாற்றாது செல்வத்தைத் தானே துய்த்து இன்பமுடன் வாழ்தல் தீவினைக்கும் ஆளாக்கும் என்பதை மறந்துவிடுதல் கூடாது. ஆதலால், நமது சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பு ஒப்புரவை உயிர்நாடியாகக் கொண்டது: ஒப்புரவை ஒழுக்க நெறியாகக் கொண்டது. ஒப்புரவே உயர் தவமுமாகும். அந்த ஒப்புரவு நெறி-உயர் வேளாண்மை நெறி நமது வாழ்க்கையில் படரவேண்டும்; அவ்வழி நமது சமுதாயம் வளரவேண்டும்.

வாழ்க்கையே சமயம்

மீனுக்குத் தண்ணீர் இன்றியமையாதது. மீனுக்கும் தண்ணீருக்கும் உள்ள உறவு ஒரோவழி அமைந்ததன்று: பிரிக்க முடியாதது; நிலையானது. அதுபோலத்தான் மனிதனுக்குச் சமயமும் அமையவேண்டும். இன்று நமது வாழ்க்கையில் சமயம் ஒரு பகுதியாக அமைந்துவிட்டது. சமய வாழ்க்கையைப் பெறுதற்குரியதாகிய வழிபாடு, பிரார்த்தனை முறை போன்றவைகள் கடவுளுக்கு மனிதன் வழங்கும் பயன் நோக்கிய கைமாறு (பிரதிப் பிரயோசனம்) போல வளர்ந்து விட்டது. முன்னர்க் குறிப்பிட்டதுபோலச் சமயம் ஒரு தத்துவம் மட்டுமன்று கொள்கை மட்டுமன்று: அதுவே ஒரு வாழ்க்கைமுறை. வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் சமயம் தழுவிக் கலக்கவேண்டும். அன்றே