பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/380

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

376

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருக்க வேண்டும். எங்கேயும் கடவுள் இருக்கிறார். கருத்து வேற்றுமையைப் பற்றிக் கூட சண்முகவேல் சொன்னார். அது சாதாரணமான காரியம். ஆளுக்கொரு நெஞ்சும், ஆளுக்கொரு தலையும், ஆளுக்கொரு குரலும் கொடுத் திருக்கிறபொழுது, கருத்து வேற்றுமை கொள்வது என்பது ஒரு சாதாரணமான காரியம். ஆனால், கருத்து வேற்றுமையைக் காழ்ப்பாக மாற்றுவதுதான் மிகக் கொடுமையான செயல். வேறுபட்ட சுவைகளினாலே உலகம் மகிழ்ச்சியாக இருக்கிறது! ஒரே நிறம், ஒரே சுவை; ஒரே உப்பு; ஒரே புளி, ஒரே மிளகாய் என்றால், சுவை எப்படித் தோன்ற முடியும்! எனவே கருத்து வேற்றுமை என்பது தவிர்க்க முடியாதது-அது இயற்கை ஆனால், எங்கே கருத்து வேறுமைகள் விவாதத்துக்கு உரியனவாக இல்லாமல், ஆய்வுக்கு உரியனவாக இல்லாமல் அல்லது தெளிவுக்கு உரியனவாக இல்லாமல், அவற்றில் எதோ கட்சி கட்டிக் கொள்வதற்காக, காழ்ப்பாக ஆக்குகிற பொழுதுதான், சமூகம் முறை பிறழ்ந்து போகிறது; தடம் புரண்டு போகிறது. எனவே, வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமை காணுதல் என்பது நம்முடைய நாட்டினுடைய விழுமிய நாகரிகம். வேற்றுமை இல்லாத ஓர் உலகியல் கிடையாது. பால் வேறுபாடு; சுவை வேறுபாடு; இராக வேறுபாடு அத்தனையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்த வேறுபாடுகளுக்கிடையே நான் ஒருமைப்பாட்டைக் காணத் தான் விரும்புகிறேன்.

எல்லாக் கருத்துக்களும் எல்லாருக்கும் உடன்பாடு உடையனவாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நான் இந்தச் சமூகத்தைப் பார்க்கின்ற பார்வை, இந்தச் சமயத்தைப் பார்க்கின்ற பார்வை, பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், என்னுடைய கருத்தில் எது உடன்பாடு உடையது? அதைச் சொல்லுங்கள்! அல்லது எல்லாமே உடன்பாடு உடையன அல்லவா? எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், எது உடன்பாடு உடையது?