பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/386

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆற்றல் வழிபாடு என்று சொல்லுவார்கள். அந்த ஆற்றலை மிகுதியாகப் பெற்று நீங்கள் உங்கள் வீட்டையும், வீதியையும், நாட்டையும், உலக மனித சமுதாயத்தையுமே வாழ்விக்கிற அளவுக்குப் பேறும், கருணையும் உடையவர்களாக. அருளும், திருவும் உடையவர்களாக விளங்க வேண்டும் என்று நான் வாழ்த்தி, நீண்ட நெடிய நேரம் பல்வேறு செய்திகளைச் சொல்லி இருக்கிறேன். நான், சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசுவது என்பது வழக்கமில்லை. ஆனால், இன்றைக்கு மிகுதியாகவே பேசி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இன்றைய நாள் என்னுடைய பேச்சினுடைய சாரமாக நினைவூட்டிய செய்திகள்! தமிழ் வேறு சமயம் வேறல்ல. ஒரு மொழி உயர்ந்ததாக இருப்பது அதனுடைய இலக்கியத்தினால் மட்டும் அல்ல. இலக்கியம் உணர்த்துகிற அறநெறி; வாழ்க்கை நெறி; செழுமையான அறப்பண்பாடுகள்; இவைகளைப் பொருத்துத்தான் அந்த மொழி சிறந்து நிற்கிறது. தமிழ் சிறந்தது என்பதினாலேதான், தமிழை நாம் பாராட்டுகிறோம். நான் தமிழ் மொழியைத் தாய்மொழியாக உடையவன். தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்தேன்; என்னுடைய தாய் தமிழில் பேசினாள் என்பதற்காக மட்டும் நான் தமிழ்ப்பற்றாளனாக இல்லை. என்னுடைய தமிழ், உலகு புகழ்கின்ற திருவள்ளுவரைத் தந்திருக்கின்றது; அரசியல் நீதி பெறுக என்று கூறிய இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரத்தைத் தந்திருக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுளை மண்ணிலே நடமாடச் செய்து, மானிடனுக்குச் சொந்தமாக்கி, மானிடனுக்கு உரிமையாக்கி, அவனையும் வைகையாற்றங் கரையில் நிற்க வைத்து, பண் சுமந்த பாடலுக்காக மண் சுமக்க வைத்து, திருவாரூர்த் தெருவிலே ஒருவனுக்குத் திருமணம் செய்வதற்காக நடக்க வைத்தது. இந்த நாட்டில் தமிழ் செய்த சாதனையை உலகத்தில் வேறு எந்த மொழியும் செய்ததில்லை. எல்லாச் சமயங்களும் போய்த் தட்டு; கதவு