பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/387

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

383


திறக்கப்படும்’ என்று சொல்லியது. என்னுடைய மொழி கடவுளை மண்ணிலே நடமாட விட்டு என் வீட்டுக் கதவைத் தட்டி என்னை எழுப்பி, என்னோடு பேசி உறவு கொண்ட ஒரு மொழி என்பதை நான் உணர்கிறேன். எனவே தமிழும் சைவமும் தமிழும் சமயமும் பிரிக்க முடியாதவை. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்திலிருந்து திருக்கோயில் எடுத்தலும், திருக்கோயில் வழிபாடு செய்தலும், நம்முடைய பழைய மரபு என்பதை மறந்துவிடக் கூடாது. சாவா மருந்தாகிய நெல்லிக்கனி கொடுத்த அதியமானையே ‘நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும! நீயே’ என்று வாழ்த்தினார்கள். திருநீலகண்டராக இருப்பதும், நஞ்சை உண்டு கண்டத்தில் அடக்கியதும், கருணைக் கண்டம் என்பதை மறந்து விடாதீர்கள்; நாம் மற்றவர்கள் வாழ்வதற்காக எந்தத் துன்பத்தையும் ஏற்றுக் கொள்ளலாம்.

நாம் வாழ்வது ஒரு பெரிய காரியம்தான். ஆனால், மற்றவர்களை அழிக்காமல், மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல் வாழ்வது என்பதுதான் மிகப் பெரிய காரியம்! எனவே, அமரர்கள் வாழ்வதற்காக அவர்கள் நஞ்சினால் சாகாமல் இருப்பதற்காக, தான் நஞ்சை உண்டு, வாழ்விக்கிற அமுதத்தை அமரர்களுக்குக்கொடுத்தான். அந்தக் கருணைக் கண்டம் இறைவனுடைய கண்டம். அதைத் தமிழ் நெறி பேசுகிறது. எனவே தமிழ்நெறி சாகாத நெறி. சாகாத அறநெறியை வற்புறுத்துகிற நெறி என்பதை நினைவூட்டி இந்தத் தமிழ்நெறி சமுதாய நெறியைத் தழுவி நின்றது ‘செழுந்தமிழ் வழக்கு’ என்று சேக்கிழார் பாராட்டினார்.

பிற்காலத்தில் ‘அயல் மொழி’ ஊடுருவலால், தமிழ் பைய மறக்கத் தலைப்பட்டது. தமிழகத்தில் இறைவனுடைய திருக்கோயில்களிலே தமிழ்நெறி தலை தடுமாறியது. தமிழிலே இறைவனுக்கு வழிபாடு செய்தால் செல்லுமா? செல்லாதா? என்ற நிலை உருவாகியது. அப்பொழுது சிவபெருமானே தமிழ் அர்ச்சனை இயக்கத்தை தமிழ் வழிபாட்டைத்