பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/393

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

389


மனிதனின் ஆசையுணர்வு அளவுக்கு அதிகமாக-எல்லை கடந்து செல்கிறபோது ஆபத்து நேருகின்றது. ஒரு வரையறையுடன் எந்த உயிருக்கும் இன்னலற்ற முறையில்-நன்மை பயக்கும் வகையில் ஆசை உருவெடுத்தால் அது போற்றப் பட வேண்டியதே.

மனிதனைக் குரங்குக்கு ஒப்பிடுவார்கள். இப்போதைய மனிதர்களில் சிலரைக் குரங்கோடு ஒப்பிடவும் முடிவதில்லை. இப்போதையச் சில மனிதர்களை விட குரங்கு எவ்வளவோ உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறதெனலாம். குரங்கினது இயல்பு வெள்ளிடைமலை. கொம்பு விட்டுக் கொம்பு தாவுவது அதன் இயல்பான செயல். அஃது ஒரு கொம்பை விட்டு மறு கொம்புக்குத் தாவும்போது முன்பு பிடித்த கொம்பை விட்டு விட்டுத்தான் தாவுகிறது. ஆனால், அளவு கடந்த ஆசை வழிப்பட்ட மனிதனோ ஒன்றை விட்டு ஒன்றைப் பற்ற முயல்வதில்லை. எல்லாவற்றையும் ஒரு சேரப் பற்றி நிற்க விரும்புகின்றான். இந்த எல்லை கடந்த-வரம்பு மீறிய ஆசைப்பெருக்கினாலேதான் அவன் பல அல்லல்களுக்குள்ளாக வேண்டியிருக்கிறது.

அருமையான ஓர் ஆங்கிலக் கதையுண்டு: பொன்னிலே ஆசை கொண்டவன், தான் தொட்டதெல்லாம் பொன்னாக விரும்பி இறைவனிடத்திலே வரம் வேண்டித் தவமிருந்தான். துன்பங்கள் பலவற்றைத் தாங்கித் தவமிருந்ததால் இறைவன் எழுந்தருளினார். “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டருளினார். “யான் தொட்டதெல்லாம் பொன்னாக அருள்பாலிக்க வேண்டும்” என்று பக்தியுடன் விண்ணப்பம் செய்தான். இறைவன் அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி மறைந்தருளினார்.

வரம்பெற்ற நேரம் தொடங்கி வகை வகையான பொருட்களைத் தொட்டுத் தொட்டு அவைகளைப் பொன்னாக்கினான். பொன்குவியல் நிறைய நிறைய அவனது