பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/394

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பூரிப்பு அளவு கடந்து அவனது உடலையே பூரிக்க வைத்தது. மகிழ்ச்சிப் பெருக்கு அவனைப் புது மனிதனாக்கியது. பசியெடுத்தது. உணவுக்குப் பக்கத்திலே போய் உணவைத் தொட்டான். அவ்வுணவும் பொன்னாகியது-பசி அவனை வாட்டி வதைக்கக் கவலை தலைகாட்டியது. சாப்பிட முடியாத நிலை வந்துவிட்டதை எண்ணி எண்ணி ஏங்கினான். இந்த வருத்தத்தோடு வேறொரு பெருவருத்தமும் காத்திருந்தது. பக்கத்தில் நின்ற தன் பிள்ளையையும் தொட்டான். அதுவும் பொன்னாகியது. ஆசைவெறியால் ஆண்டவனிடம் கேட்டுப் பெற்ற வரம். வயிற்றுக்குள் சோற்றையே அனுப்ப முடியாமற் செய்து விட்டதை நினைத்து “ஆண்டவனே! வயிற்றுக்குணவு கிடைத்தாலே போதுமானது” என அரற்றினான். ஆகவே ஆசைக்குக் கட்டுப்பாடு தேவை.

ஆசையை ஒழித்துவிடு என்பதைக் காட்டிலும் ஆசைக்கு எல்லை வகுத்துக்கொள் என்பது சாலச் சிறந்தது. ஏனெனில் ஆசை மனிதனைப் பொறுத்தமட்டில் ஒழிக்க முடியாதவொன்று. ஒரு சில நன்மைக்காக ஒரு சிலர் ஆசையுணர்வுக்குத் தடை விதிக்கலாம். பொதுப்படையாகச் சமுதாய வாழ்வில் ஆசையை அழிக்க முயல்வது முடியாத காரியம்-வரையறை செய்து கொண்டு வாழ்தலே இயலும்.

அன்பை-அறத்தைப் பேணி வாழ நாம் ஆசைப்பட வேண்டும். அறஞ்செய்வதற்காகவே வாழ்கிறோம் என்ற நினைப்போடு-அறமற்றவைகளை அறவே தள்ளி இன்பத் தமிழ் நாட்டினுடைய இணையற்ற பண்பினைக் காக்க ஆசை கொள்ள வேண்டும்.

‘அறத்தால் வருவதே இன்பம்’ என்ற கோட்பாட்டுக்குத் தலை சாய்த்து வாழ்ந்ததனாலேதான் பழந்தமிழகம் பாரில் உயர்ந்து பண்புவழிச் சிறந்திருந்தது. அகத்திலே அன்பை வளர்க்கவும் அறத்தைப் பேணவும்