பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/397

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

393


எங்கோ துரத்தில் வைத்து வணங்கிய நிலைமாறி மிகமிக அண்மையில் எம்பிரானை அழைக்க, காண வாழ்த்த வணங்கத் திருமுறைகள் வாய்ப்பளிக்கின்றன.

திருமுறைக் கடலிலே ஆழக் குளிக்கின்ற போது, சமுதாய நன்மைக்காக-மனித இன மேம்பாட்டிற்காகப் பாடுபட்டுழைக்க வேண்டுமென்ற வேட்கையுண்டாகின்றது. நாடு உய்யவந்த நாவுக்கரசரது திருவார் தேவாரத் திருப்பதிகங்களினாலே தீதற்ற திறமையும் திண்மையும் நிரம்பி, உள்ள உறுதியையும், பிறர்க்காக உழைத்துப் பேரின்பமடையும் மனோ பாவத்தையும் பெறமுடிகிறது. மனிதகுல வாழ்வுக்கும் வளத்துக்கும் அயராது சிந்தித்த சிந்தனைச் செம்மல்களில்- பேராசிரியர்களில் அப்பரடிகளும் ஒருவர். நமது கருத்துப்படி அப்பரடிகள் தொண்ணுறு விழுக்காடு சமுதாய மலர்ச்சிக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

தமிழ்ச் சமூகத்தின் மொழிவழி நாகரிகத்தையும் அவர் பேணிக்காக்கப் பெருந் தொண்டாற்றியமை மறக்க முடியாதது. சமணத்தின் நுழைவினால் சைவசமயமும் தமிழும் குன்றக் குற்றுயிராகிக் காலப்போக்கில் மறைந்தொழிய ஏதுவாகுமெனக் கருதியே, சமணர்களால் உண்டான இன்னல்களை எல்லாம் எதிர்த்துப் போராடினார்; இசையைத் துய்க்கத் தெரியாத-அனுபவிக்கத் தெரியாத அன்றையச் சமணர்கள், மலரை மணக்காதே என்பது போல் இசையைப் பொழியாதே என்பதுபோல் இசையைச் சுவைக் காதே எனத் தடை போட்டார்கள். தடைவரினும் படை வரினும் தளராது தன்னம்பிக்கையால் - உளவலிமையால் இன்னிசை பொழிந்து இசைத்தமிழ் வளர்த்தார் அப்பரடிகள்.

பிறர் நலம் பேணுகின்ற உள்ளத்தினரான அப்பரடிகள் அல்லும் பகலும் அறவாழி அந்தணன் தாளை இறைஞ்சி இறைஞ்சி அவனது ஆன்மாக்களிடத்து அன்பு காட்டி அரும்பாடுபட்டார்.