பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/401

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

397


“தாயிற் சிறந்த தயாவான தத்துவனாகவும்”, “பால் நினைந்தூட்டுந் தாயினுஞ்சாலப் பரிவுடையவனாகவும்” இருப்பதை அனுபவத்திலே கண்டு மணிவாசகர் பாடியருளினார்.

இத்தகைய இறையின் இயல்புகளைத் தெளிவாக்கி உலகுக்கு ஒளிபரப்ப எழுந்த சாதனங்களே திருமுறைகள் ஐம்புலவேடர்களின் இயல்புகளைக் குறைத்து-மறைத்து மாண்பார் நிலைக்கு மாந்தரை உயர்த்த உதவுவன நமது சைவத்திருமுறைகள் என்று அழுத்தமாகக் கூறி வாழ்த்தி விடைபெற ஆசைப்படுகின்றோம்.



நாவலப்பிட்டியில் - 2


அடியார்கள் பலர் வாழ்ந்தார்கள். அற்புதங்கள் பல புரிந்தார்கள். வேதம் பாடும் இறைவனை இன்தமிழ்ப் பாக்களால் ஏவல் கொண்டார்கள். இதயங்கலந்த உறவும் இன்னிசைப் பொழிந்த மெய்யடியார்களின் மேன்மைக்கு உதவி புரிந்தன. சைவ நன்மக்களின் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் ஏனைய இனத்தவர்க்கும், மதத்தவர்க்கும் நமது அடியார்கள் பயன்பட்டிருக்கிறார்கள். அவர்களது சிந்தனை ஆழியினின்றும் எடுக்கப்பெற்ற தத்துவமுத்துக்கள், நம்மை வாழவைப்பதுடன் வாழ்க்கை இன்னதுதான் என்று காட்டியும் நிற்கின்றன.

நமது நாயன்மார் வரலாற்றில் சுந்தரர் வரலாறு நாம் அறிந்திருக்கவேண்டிய ஒன்றாகும். இல்லறத்தில் வாழ்ந்து இன்னல்களுக்கு இலக்காகி இறைவனடி சேர்ந்த வரலாறு; அது தமிழர்களின் கருத்துடன் கலந்து நிற்கத்தக்கது. துன்பத்தின் போது சோர்ந்து வாழ்க்கையில் விரக்தி கொள்பவர்களைத் தட்டியெழுப்பி, வாழ்க்கையில் பிடிப்பை உண்டாக்கவல்லது சுந்தரர் வரலாறு.